Parthiban

பார்த்திபன் இயக்கத்தில் நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாக உருவான 'இரவின் நிழல்' திரைப்படம், கடந்த 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்தப் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமெல்ல என்று விமர்சித்திருந்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் குரல் பதிவு ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.

Advertisment

அந்தப் பதிவில், “இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கான தன்னிலை விளக்கம்தான் இந்தப் பதிவு. கடந்த ஒரு வருடமாக உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று என்னுடைய படத்தை நான் விளம்பரப்படுத்திக்கொண்டு இருந்தேன். உலக படங்களுக்கு இசையமைக்கும் ரஹ்மான்தான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவருடன் பெரிய டீம் இருந்தது. இது உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் இல்லையென்றால் நிச்சயம் அவர்கள் சொல்லியிருப்பார்கள். ஏற்கனவே நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட் படம் வந்துவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் கூறும் படத்தினை நான் இதுவரை பார்த்ததில்லை.

Advertisment

ஒத்த செருப்பு படத்தின்போது இது மாதிரி படங்கள் வந்திருக்கிறது என்று கூறித்தான் அந்தப் படத்தை விளம்பரப்படுத்தினேன். உலகத்தின் முதல் சோலோ ஆக்ட் படம் என்று அந்தப் படத்தை நான் கூறவில்லை. அதேபோல சிங்கிள் ஷாட் படம் என்று இணையத்தில் போட்டு பார்த்தால் சில படங்கள் வருகின்றன. நான் லீனியர் முறையில் படங்கள் இருக்கிறதா என்று பார்த்தால் அன்றைக்கும் இல்லை, இன்றைக்கும் இல்லை. மாறன் நேர்மையானவராக இருந்திருந்தால் ஏற்கனவே ஒரு படம் இருக்கிறது, அதனால் உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்று போடுவது தவறு என்று முன்பே சொல்லியிருக்கலாம். அவர் சொல்லியிருந்தால் உலகத்தின் இரண்டாவது படம், ஆசியாவின் முதல் படம், இந்தியாவின் முதல் படம் அல்லது கோடம்பாக்கத்தின் முதல் படம் என்றுகூட போட்டிருப்பேன். அதற்கெல்லாம் நான் தயங்காதவன். மற்றவர்களின் உழைப்பை எடுத்து மக்களை ஏமாற்றக்கூடியவன் அல்ல.

படம் பற்றிய அவர் விமர்சனம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது பிரச்சனையில்லை. 15 நாட்களுக்கு முன்புகூட ஸ்பெஷல் ஷோவில் படம் பார்க்க அவரை அழைத்தேன். அன்றைக்குக்கூட அவர் சொல்லியிருக்கலாம். ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்த்துவிட்டு என் படத்திற்கு செல்லுங்கள் என்று நான் பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறேன். அவரின் விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்த்தவர்கள், அவர் சொன்னதுபோல இல்லை என்று வெளியே வந்து சொல்லியிருக்கிறார்கள்” எனப் பேசியுள்ளார்.

Advertisment