சமீபத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசிய பேச்சு தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அவர் பேசுகையில், “திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர்” என பேசியிருந்தார். இதையடுத்து இவரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. ராஜராஜ சோழன் இந்துதான் என்று ஒருதரப்பும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று ஒரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பல முன்னணிதிரை பிரபலங்கள் கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "Crosses-400Crores. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது. இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம். எழுப்பினால்… இன்னும் ஒரு 100" என குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றிகரகமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பார்த்திபன். இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.