
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் டீன்ஸ் என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவகும் நிலையில் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தை பார்க்கையில், பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒரு நாள் பள்ளிக்கூடத்தை கட்டடித்து விட்டு நண்பரின் பண்ணை வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு 500 வருட பழமைவாய்ந்த பாழுங்கிணற்றை பார்க்கின்றனர். அந்த கிணறு குறித்து அமானுஷியங்கள் நிறைந்த பேய் கதைகள் இருக்கும் கூறப்படும் நிலையில் அந்த பண்ணையில் மாட்டிக்கொள்கின்றனர். அதிலிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை திகில் கலந்து கூறியிருப்பது போல் அமைந்துள்ளது. இந்த ட்ரைலரை மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டார்.