Skip to main content

”சிவாஜியைவிட மிகச் சிறந்த நடிகர்கள் இருந்தார்கள். ஆனால்...” - பார்த்திபன் பேச்சு 

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

Parthiban

 

தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களைத் தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுதி, தயாரித்துள்ள வெப் சீரிஸ் 'சுழல்'. பிரம்மா மற்றும் அருண்சரண் இணைந்து இயக்கும் இந்த சீரிஸில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் வரும் 17ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பார்த்திபன், “32 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் சௌகரியமான முறையில் ஒரு படைப்பில் பணியாற்றினேன் என்றால், அது இந்த சுழல் தொடரில்தான். இது, நான் முதன்முதலில் நடிக்கும் வெப்சீரிஸ். படப்பிடிப்பு நெருங்கும் தருணத்தில் என்னைத் தொடர்பு கொண்டு புஷ்கர் & காயத்ரி பேசினார்கள். அவர்களது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தத் தொடரின் கதையை கேட்டவுடன் அதில் ஒரு ஜீவன் இருந்ததை உணர்ந்தேன்.

 

நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு  புராணக்கதை உண்டு. ஞானப்பழம் யாருக்கு என்ற கதையில், ஞானப் பழத்திற்காக முருகன் உலகமெல்லாம் சுற்றச் சென்று விடுவார். விநாயகர் அருகிலிருக்கும் அப்பா, அம்மாவைச் சுற்றிவிட்டு, ஞானப்பழத்தைப் பெற்றுவிடுவார். அந்த விநாயகர் கதைதான் அமேசானின் கதை.

 

அந்தக் காலத்தில் சிவாஜியைவிட மிகச் சிறந்த நடிகர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களுடைய நடிப்பு பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஏனெனில் ஒவ்வொரு ஊராகச் சென்று நடிக்க வேண்டும். சென்னையில் அழகாக நடிக்க வேண்டும். பிறகு கோயம்புத்தூருக்குச் சென்று மீண்டும் அதே போல் அழகாக நடிக்க வேண்டும். பிறகு மும்பைக்குச் சென்று அதே போல அழகாக நடிக்க வேண்டும். ஆனால் அமேசானில்.. ஒரே ஒரு தொடரில் நடித்தால், உலகத்தில் உள்ள 240 நாடுகளில் ஒரே நேரத்தில், இந்த தொடரைப் பார்க்க முடியுமென்றால், இதுதான் அமேசானின் ஞானப்பழம். நம்முடைய படைப்பை உலக அளவில் ஒரே தருணத்தில் பார்த்து ரசிக்கிறார்கள் என்பது மட்டற்ற மகிழ்ச்சிதானே.

 

ரெண்டு பொண்டாட்டியுடன் குடும்பம் நடத்துவது கடினம் என்பார்கள். இந்த வெப் சீரிஸில் இரண்டு புருஷன்களுடன் குடும்பம் நடத்திய அனுபவம். ஆனால் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ஒரே ஆள் இரட்டை வேடம் போட்டது போல் இருந்தது. இந்தத் தொடரில் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் தொழிற்சங்கத் தலைவராகவும், ஒரு பெண்ணின் தகப்பனாராகவும் நடித்திருக்கிறேன். இதில் பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களையும், சந்தானபாரதி போன்ற கலைஞர்களையும் மனதார பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்