இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதனிடையே தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்கம் பொறுத்தவரை ‘54ஆம் பக்கத்தில் மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், திடீரென அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் ஒரு அறிவிப்ப வெளியிடப்போவதாகவும் உஷாராக இருங்கள் என்றும் பதிவிட்டிருந்தார். இதனால் எது குறித்தான அறிவிப்பு என ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது. இதை வைத்து அவர் அரசியலுக்கு வருகிறாரா என்ற கருத்துகளும் யூகிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த அதிர்வலை அறிவிப்பை அறிவித்துள்ளார் பார்த்திபன். ‘நான் தான் சி.எம்’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பெரியோர்களே, தாய்மார்களே, வாக்களப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் சி.எம். நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!
போடுங்கம்மா ஓட்டு ‘போட்’ சின்னத்தைப் பாத்து! இப்படிக்கு, சி.எம். சிங்காரவேலன் எனும் நான்… ‘சோத்துக் கட்சி’” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அறிவிப்பு போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். அதில் கண்ணாடி போட்டுக் கொண்டு வெள்ளை நிற சட்டையில் நிற்கிறார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள், அவரது நக்கல் நையாண்டி தனத்தை புரிந்து கொண்டு படம் தொடர்பாக வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.