இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக கடந்த 1ஆம் தேதி தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘இட்லி கடை’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்கம் பொறுத்தவரை ‘54ஆம் பக்கத்தில் மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார். மேலும் ‘நான் தான் சி.எம்’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி நடிக்கிறார். 

Advertisment

இந்த நிலையில் மௌனம் என்ற ஒரு பட விழாவில் பார்த்திபன் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். சினிமா பிரபலங்களுக்கு அரசியல் பொறுப்பு இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, “சினிமாவில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக சமூக பொறுப்பு இருக்க வேண்டும். மக்கள் தான் சினிமாக்காரர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். எங்க அப்பா அம்மா எனக்கு சாப்பாடு போட்டிருந்தாலும் எனக்கு சமூகத்தில் மதிப்பு ஏற்பட்டது புதிய பாதை மூலம் மக்கள் கொடுத்த ஆதரவுதான். அதனால் இந்த சமூகத்துக்கு நான் எதாவது திருப்பு கொடுக்க வேண்டும் என்றுதான் பார்த்திபன் மனித நேய மன்றம் என்று ஒரு மன்றத்தை ஆரம்பித்தேன். பின்பு சோத்து கட்சி என ஒரு படம் ஆரம்பித்து அதே பெயரில் ஒரு கட்சியையும் ஆரம்பித்து அதன் மூலம் அரசியலில் மக்களுக்கு எதாவது பண்ண முடியுமா எனப் பார்த்தால் நிறைய பணம் தேவைப்படுகிறது.

Advertisment

மனசுக்குள் வீராப்பு இருக்கிறவர்கள் மட்டும் இங்கு அரசியல் பண்ணிட முடியாது. அரசியல் என்பது வேறு களம். இது புரியாது என்றே பிரித்து வைத்திருந்தோம். ஆனால் அந்த சமயத்தில் தான் எம்.ஜி.ஆர் வந்தார். ஆனால் இப்போது இருக்கும் சூழல் அப்படி இல்லை. அதே சமயம் யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன். அதனால் ஆளுங்கட்சி நான் எதிரானவன் என சொல்வார்கள். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. இங்கு போட்டி பயங்கரமாக இருந்தால் தான் வெற்றி நியாயமாக இருக்கும்” என்றார். 

இதையடுத்து அவரிடம் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தாக்குதல்கள் நடப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவிடும் போது, அந்த பதிவுகளின் கீழ், கெட்ட கெட்ட வார்த்தையில் கமெண்ட் செய்கிறார்கள். அதை பார்க்கும் போது கோவம் வருகிறது. சட்டையை பிடித்து ‘யார்ரா நீ நாயே, உனக்கு முகம்னு ஒன்னு இருந்தா வெளில வாடான்னு சொல்ல தோணுது’.ஆனால் அவங்களுக்கு முகமே கிடையாது. அவங்களுடைய கமெண்ட் நம்மளை எரிச்சலூட்டுகிறது, நம்முடைய வேகத்தை குறைக்கிறது. இதற்கு காவல் துறை தரப்பில் சரியான நடவடிக்கை எடுகக் வேண்டும். சமீபத்தில் நான் இறந்துவிட்டதாக வதந்தி வந்தது தொடர்பாக காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறேன். ஆனால் இதுவரை என்ன நிலமை எனத் தெரியவில்லை” என்றார்.

Advertisment