/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/43_38.jpg)
‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் 'இரவின் நிழல்'. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், பார்த்திபனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் இரவின் நிழல் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”தைரியத்திற்கு அளவு கிடையாது என்று நம்புபவன் நான். புதிய பாதை படம் பண்ணிய பிறகு எனக்குள் ஒரு திமிர் வந்தது. உலகத்திலேயே ஒரு இயக்குநர் தன்னைத்தானே ஹீரோவாக அறிமுகம் செய்துகொண்ட ஆள் நான் மட்டும்தான். அபூர்வ சகோதரர்கள் படத்துடன் இணைந்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை புதிய கீதை பெற்றது. அப்படி என்றால் எனக்குள் ஒரு திமிர் இருக்குமா, இருக்காதா? அந்தத் திமிரை திருவான்மியூரில் நான்கு க்ரவுண்ட் இடம் வாங்கிப்போட பயன்படுத்தாமல் கூடுதல் திமிராக பயன்படுத்தினேன்.
கதையில்லாமல் ஒரு படம், ஒரே ஒரு நடிகர் மட்டும்தான் படத்தில் என்றெல்லாம் முயற்சி செய்யும்போது அந்தப் படத்திற்கு யார் வருவார்கள்? என்னை மாதிரி 10 பைத்தியக்காரன்கள் வரலாம். கே.பாலசந்தர் சார்தான் என்னுடைய ஆதர்சம். அவருடைய படம் ஓடும் திரையரங்கிற்கு சென்று பார்த்தால் கூட்டமே இருக்காது. ஒருகட்டத்தில் அவரை நம்பி படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இப்போது என்னை நம்பியும் பணம்போட யாரும் இல்லை. இங்கு உண்மையான படைப்பாளிகளுக்கு மரியாதை இல்லை என்பதால் அடுத்தடுத்த படங்களில் சவால்களை மட்டும் அதிகப்படுத்தி பயணிக்கிறேன்.
இரவின் நிழல் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் நீங்கள் படம் பண்ணவில்லை, தவம் பண்ணிருக்கிங்க என்று சொன்னார்கள். மாஸ் படங்களை பார்த்து ரசிக்கும் நம் ரசிகர்களுக்கு மத்தியில் வித்தியாசமான படங்கள் வராதா என்று எதிர்பார்க்கும் ஒரு கூட்டம் உள்ளது. அந்த ஒரு கூட்டத்திற்காக எடுக்கப்படும் படங்கள்தான் என்னுடைய படங்கள்.
என்னுடைய படத்தில் ஒவ்வொரு சீனும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்தியன் 2 படத்திற்கான மேக்கப் டெஸ்ட்டின்போது கமல் சார் சட்டைப்பையில் பேனா வைக்க வேண்டும் என்பதால் அவரே கையில் மூன்று பேனாக்களை கொண்டுவந்துவிட்டாராம். ப்ரொடக்ஷனில் ஏற்கனவே பேனா வாங்கிவைத்திருக்கிறார்கள். இருந்தாலும் கமல் சார் வாங்கிவந்துவிட்டதாக ஷங்கர் சார் சொன்னார். நான் மிகப்பெரிய பொறுக்கி. கமல் சாரும் என்னை மாதிரி மிகப்பெரிய பொறுக்கி. எங்காவது வெளிநாடு சென்றால் வித்தியாசமாக ஏதும் கிடைக்காதா என்று பொறுக்கி பொறுக்கித் தேடுவேன். அந்த வகையில், எனக்கு உதாரண பொறுக்கி கமல் சார்தான்.
அந்த ஸ்டார் நடிச்ச படம் சரியா போகல சார், இந்த ஸ்டார் நடிச்ச படம் சரியா போகல சார், ஓபனிங்கே இல்லனு சொல்லும்போது எனக்கு பயங்கரமாக கோபம் வரும். ஒரு நல்ல படம் ஓடவில்லை என்று சொன்னால் பரவாயில்லை. ஒரு ஸ்டார் நடித்த படம் என்றால் நிச்சயம் ஒரு ஓபனிங் இருக்கும். அதன் பிறகும் ரசிகர்களுக்கு பிடிக்காமல் படம் ஓடவில்லை என்றால் அது நம்முடைய தோல்விதான். அந்தப் படத்திற்கே கூட்டம் வரவில்லை, உங்க படத்திற்கு எப்படி கூட்டம் வரும் என்று இப்போதும்கூட என்னிடம் கேட்கிறார்கள்.
இரவின் நிழல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பெரிய டெக்னீஷியன்கள் நிறைய பேர் வேலை பார்த்துள்ளனர். இது எல்லாமே ஜூலை 15ஆம் தேதி விடியலுக்காகத்தான். இந்தப் படம் வெற்றி பெற்றால் நிறைய தயாரிப்பாளருக்கு நம்பிக்கை கிடைக்கும். புதிய இளைஞர்கள் திரைத்துறைக்கு வருவார்கள். பெரிய நடிகர்கள் கிடைக்காவிட்டாலும் இதேபோல கதையை வைத்து மட்டுமே நல்ல படம் கொடுக்க முடியும் என்று அவர்களுக்கும் நம்பிக்கை கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)