/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/44_56.jpg)
பார்த்திபன் இயக்கத்தில் நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாக உருவான 'இரவின் நிழல்' திரைப்படம், கடந்த 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்தப் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமல்ல என்று விமர்சித்திருந்த நிலையில், புதுச்சேரியில் ப்ளூ சட்டை மாறனின் உருவபொம்மையை சிலர் எரித்தனர். இத்தகைய செயலில் பார்த்திபனின் ரசிகர்கள் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் குரல் பதிவு ஒன்றைப் பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கான தன்னிலை விளக்கம்தான் இந்தப் பதிவு. என்னுடைய பரபரப்பான ரசிகர் மன்றங்களை ஆரம்பக்காலத்திலேயே பார்த்திபன் மனிதநேய மன்றம் என மாற்றினேன். அதன் பிறகு, என்னுடைய ரசிகர் மன்றங்களின் கூட்டம் குறைந்துவிட்டது. உலகம் முழுவதும் நல்ல சினிமாவை ரசிக்கிற எல்லா நடிகர்களது ரசிகர்களும் எனக்கு ரசிகர்களாக இருப்பார்கள். பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் பணி மனிதத்தோடு இயங்குவது மட்டுமே. அந்தக் கொடும்பாவி எரிப்பு சம்பவத்தில் பார்த்திபன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த யாரும் ஈடுபடவில்லை.
நான் பாண்டிச்சேரிக்கு சென்ற பிறகுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியும். எனக்கு கொடும்பாவி எரிப்பில் எப்போதுமே உடன்பாடு கிடையாது. கொடும்பாவி எரிப்பை யார் செய்தாலும் தவறுதான். அது மனிதாபிமானமற்ற கொடுமையான செயல். இந்தச் செயலை செய்தவர்கள் பார்த்திபன் ரசிகர்கள் அல்ல. இப்படி ஒரு கூட்டம் எனக்கு இருந்தால் இப்படியெல்லாம் கஷ்டப்படாமல் கமர்ஷியல் ஆக்ஷன் படங்கள் பண்ணி இந்தக் கூட்டத்தைத் தக்கவைத்திருப்பேன். உருவபொம்மை எரிப்பது அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு கஷ்டத்தைத் தரும் என்று எனக்குத் தெரியும். அதனால் ப்ளூ சட்டை மாறனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)