Advertisment

ஒரு நோஞ்சானை அடிச்சு வீழ்த்திவிடாதீங்க - பார்த்திபன் உருக்கமான வேண்டுகோள் 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் எடுப்பதில் முக்கியமானவரான நடிகர், இயக்குனர் பார்த்திபனின் சமீபத்திய முயற்சி 'ஒத்த செருப்பு'. படம் பார்த்த அனைவராலும் மிகச் சிறந்த படமென பாராட்டப்படும் இந்தப் படம், விருதுப் படங்களைப் போல அல்லாமல் பொழுதுபோக்காகவும் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தை பார்த்த ரசிகர்களிடம் இத்தகைய வரவேற்பு இருந்தாலும் திரையரங்குகளில் குறைவான காட்சிகளே இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ரசிகர்களின் வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பார்த்து இப்போது மெல்ல காட்சி எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த வாரம் பாண்டிராஜின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படம் வெளிவர இருப்பதால் அந்தப் படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்து ஆடியோ ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் அவர் பேசியிருப்பது...

Advertisment

parthipan

"திரையரங்கு உரிமையாளர்களுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கம். முதலில் அனைவருக்கும் நன்றி. என்'ஒத்த செருப்பு சைஸ்7' பெரிய தயாரிப்பாளர் எடுத்த படம் அல்ல. விளையாடிக்கொண்டு சூதாடி கொண்டு தான்தோன்றித்தனமாக எடுத்த ஒரு படம் அல்ல. ஒரு நிஜமான தூய்மையான நேர்மையான கலைஞன் படம் எடுக்க பணம் இருக்கிறதா என்பதைவிட தன்னிடம் உள்ள திறமையை இருப்பதை எல்லாம் வைத்து கடன் வாங்கி கஷ்டப்பட்டு ஒரு நல்ல சினிமாவை எடுத்திருக்கிறேன். ஆனால் இந்த நல்ல சினிமா என்பது ஒரு 4 பேர் பார்க்கும் படமாக இல்லாமல் ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு படமாக இருக்க அதற்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் இருப்பதால்தான் நான்காவது நாள் கூட அழகாக கடந்து இருக்கிறது. இதன் முதல் நாள் காட்சியில் திரையரங்குகளில் பத்திலிருந்து பதினைந்து பேர் தான் இருந்தார்கள். அதன் பிறகு மெதுவாக சூடுபிடிக்க ஆரம்பித்து தற்பொழுது நாலாவது நாள் 60 லிருந்து 70 பேர் திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள். இதிலிருந்து நான் சொல்வது என்னவென்றால் ஒரு படம் ஜெயிக்க காலம் தேவைப்படுகிறது. அதனால் அதற்கு உரிய காலத்தை இன்னும் ஒரு வாரம் தியேட்டர் உரிமையாளர்கள் நீட்டித்தால் இம்மாதிரியான படங்களுக்கு நல்ல வரவேற்பு இன்னும் அதிகமாக கிடைக்கும். நாட்கள் செல்லச் செல்ல தான் மெதுவாக மக்கள் கூட்டம் உள்ளே வந்து படத்தை பார்த்து கொண்டாட அதிக வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன். அதுபோக அடுத்த வாரம் விடுமுறை நாட்கள் அதிகமாக வருவதால் குடும்பமும் குழந்தைகளும் அதிகமாக என் படத்தை பார்க்க வாய்ப்புகள் இருக்கின்றது. இருந்தும் திரையரங்குகளில் படத்தை நீட்டிக்க இருக்கும் சிரமங்களையும் நான் நன்கு அறிவேன். அடுத்தடுத்த வாரங்கள் பல படங்கள் வரஇருப்பதால் இருக்கும் படங்களை தூக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். அதையும் நான் அறிவேன். இருந்தாலும் தயவுகூர்ந்து என் படத்திற்கு சில காட்சிகளை குறைத்தால் ஆவது மேலும் ஒரு வாரம் நீங்கள் நீட்டித்தால் அது எனக்கும் தமிழ் சினிமாவிற்கும் ஆரோக்கியமாக அமையும். இப்படத்திற்கு லாபமோ நஷ்டமோ எது ஏற்பட்டாலும் அது என்னையே சாரும். இது முழுக்க முழுக்க என் பணம் மட்டுமே. நான் யாருக்கும் எதிரி கிடையாது. அந்தப் படம் யாரையும் சார்ந்ததும் கிடையாது. அதனால் இப்படம் கொடுக்கும் முடிவுகள் அனைத்தும் என்னை மட்டுமே சாரும். அதனால் உங்களை விரும்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன் தயவுசெய்து என் படத்தை நீட்டிக்க வேண்டுகிறேன். ஏனென்றால் என் படம் இப்போதுதான் மக்களுக்கு நன்றாக புரிய ஆரம்பித்திருக்கிறது. இப்படம் அவ்வளவு மோசமான படமும் இல்லை ஒரு தரமான படம் தான். அதனால் நாட்கள் மேலும் கூடினால் கண்டிப்பாக இந்த படம் ஜெயிக்கும். தமிழ் சினிமா வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். எனவே இப்படத்திற்கு திரையரங்குகளை தயவுசெய்து ஒதுக்கித் தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதையெல்லாம் மீறி படம் சரியாக செல்லவில்லை என்றால் நீங்கள் தாராளமாக படத்தை தூக்கி கொள்ளலாம். மற்றவர்களோடு ஒப்பிடும்போது நோஞ்சானாக ஒரு பையன் இருக்கிறான் என்றால் அவனை அடிச்சு வீழ்த்திவிடாமல் அவனுக்குக் கொஞ்சம் கூடுதல் அக்கறை காட்டி அவன் முன்னேற உதவவேண்டும். அதுபோல இந்தப் படத்திற்கு நீங்கள் உதவவேண்டும். நோஞ்சானை நீங்கள்தான் காக்க வேண்டும். அப்பொழுது தான் என் இருப்பு தமிழ் சினிமாவில் இருக்கும். இதுபோல படைப்புகள் நிறைய வரும். மக்களுக்கும் இம்மாதிரியான படங்கள் உங்கள் தயவால் நீண்ட நாட்கள் போய் சேரும். எனவே என் அழகான, அன்பான, அறிவான, மக்களுக்கு பிடித்தமான குழந்தையை உங்களிடம் ஒப்படைத்து உள்ளேன். அதற்கு இன்னும் உயிர் கொடுத்து காக்க வேண்டி கொள்கிறேன். நன்றி வணக்கம்."

kollywood parthipan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe