Skip to main content

“என்றோ வழங்கிய பேனா...” - கலைஞர் குறித்து பார்த்திபன் உருக்கம்

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
parthiban about kalaignar

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என தமிழ் சினிமாவின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து முடிவெடுத்துள்ளன. 

அதன்படி இன்று (06.01.2024) சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி பிரபலங்களுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழைத் தாண்டி மற்ற மொழிகளிலும் மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ்குமார், வெங்கடேஷ் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் ரஜினி, கமல், மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ்குமார், வெங்கடேஷ், பிரபாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கலைஞர் குறித்து பார்த்திபன் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “எப்பரிசு யார்யாருக்கு வழங்கினும், அப்பரிசில் என் கைவண்ணம் பதிப்பதழகு. என்றோ வழங்கிய பேனாவிலும் இன்று வழங்கும் நினைவுப் பரிசிலும் என் எண்ண வண்ணமும். என் யோசனையை ஒப்புக்கொண்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்றி. ஒரு நூற்றாண்டிற்கு முன் பிறந்த மழலையின் அழுகுரல், ஒரு கழகக் குரலாய் மாறி, பராசக்தி மூலம் அதுவரை வராசக்தியான ஒரு புரட்சிப் பாதையை திரையுலகம் காண மு’னா கா’னாவின்  எழுத்து வழிகாட்டியது. அந்த எழுதுகோலே அவருக்கு செங்கோலாகி இன்று கோலாகலமான கொண்டாட்டமாகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழே எங்களிருவருக்குமான மரியாதைப் பாலம். தமிழ் வாழ்க” என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.    

சார்ந்த செய்திகள்