இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் 89வது பிறந்தநாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாசினி, ஆர். பார்த்திபன், இயக்குநர் வசந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு பாலசந்தர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

Advertisment

parthiban

Advertisment

அப்போது பேசிய பார்த்திபன், “கமல் சாருக்கு சிவாஜி சார் எப்படியோ! அதுபோல எனக்கு கமல் சார். அதிலும் பாலசந்தர் சார் படத்தில் கமல் பேசிய வசனங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். மயிலாப்பூர், வாரன் சாலையிலுள்ள பாலசந்தர் அலுவலகத்துக்கு எதிரே நின்று கொண்டே இருப்பேன். இயக்குநர் வந்ததும் அவரிடம் நடித்துக் காட்டவேண்டும், பேசிக்காட்ட வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். ஆனால் அவர் கார் வரும் போது, ஒளிந்துகொள்வேன்.

இந்த சமயத்தில்தான், கவிதாலயா தயாரிப்பில் உருவான புதுக்கவிதை படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் ஐந்தாறு காட்சிகளில் வருவேன். சின்ன கேரக்டர்தான். படத்தை ரஷ் பார்த்த பாலசந்தர் சார், ‘இந்தப் பையன் யாரு, கண்ணு ரொம்ப நல்லாருக்கு. இவன் மேல கண்ணு வைச்சுக்கணும். பெரியாளா வரப்போறான்’ என்று சொன்னதாக, பிரமிட் நடராஜன் சார் சொன்னார்.

அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘சரி... அடுத்த ரஜினி நாமதான். பாலசந்தர் சார், நம்மளை உயரத்துக்குக் கொண்டு வராம விடமாட்டாரு’என்று துள்ளி குதித்தேன். ரஜினி மாதிரியே நாமளும் கருப்புதான் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனா படம் வந்தபோது அந்த சீனே படத்துல இல்ல” என்று கூறினார்.