/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/479_17.jpg)
திரைத்துறையில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சின்னத்திரையிலும் நடித்து வந்தார். இதனிடையே ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.
இந்த நிலையில் ராஜேஷ்(76) உடல் நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (29.05.2025) அதிகாலை காலமகியுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், “ஜோதிடம் மற்றும் ஆரோக்கியம் வரை ரொம்ப தெளிவா முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பார். சமீபத்தில் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் அவரை சந்தித்த போது, 99 வயசு வரை எப்படி ஆரோக்கியமா வாழலாம் என்பதை நான் உங்களுக்கு சொல்லிக்கொடுக்குறேன், என் ஆபீஸுக்கு வாங்கறேன்னு சொன்னார். வயசு குறித்து எனக்கு பாடம் எடுத்த அவர் இப்போது இல்லை. ஆரோக்யத்துக்கு என்ன தேவையோ அதன் அத்தனையும் செய்வார். நாங்க சினிமாவை பற்றி பேசுவதை விட ஆரோக்கியத்தை பற்றிதான் பேசுவோம். அந்த மாதிரி ஒரு மனிதர் திடீர்னு இப்படி மறைந்திருப்பது ஏத்துக்க முடியவில்லை. சினிமாவில் அவருக்கு எல்லாமே தெரியும். பாக்கியராஜே இவரை பார்த்து ஆச்சரியப்படுவார். கமலை வைத்து படம் எடுக்க அவருக்கு ஆசை இருந்தது. அவரது மகனுக்கு கூட அடுத்த வாரம் திருமண நிச்சயம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி இருக்கும் போது இப்படி அகிவிட்டது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதல்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)