திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் விருதுகள் ஆஸ்கர் விருதுகள். இந்த விருதுகள் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற குழுவால் மேற்பார்வையிட்டு வழங்கப்படுகிறது. இந்தக் குழு மாணவர்கள், இயக்கநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்த பலரின் ஆய்வுக்காக திரைப்படங்களில் திரைக்கதைகளை தனது மார்கரெட் ஹெரிக் நூலகத்தில் (Margaret Herrick Library) முக்கிய சேகரிப்பில் சேர்த்துவைக்கும்.
1910ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நூலகம், பல ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்து, தற்போது வரை 11,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் திரைக்கதைகள் உள்ளன. இதில் இந்திய படங்களும் இடம்பெற்றுள்ளன. அவை லகான் (2001), தேவதாஸ் (2002), சக் தே இந்தியா (2007), ராக் ஆன் (2008), ராஜநீதி (2010), குசார்சிஹ் (2010), ஆர். ராஜ்குமார் (2013), ஹேப்பி நியூ இயர் (2014), பார்ச்ட் (2015), பேபி (2015), 'செல்லோ ஷோ' (2022), ஸ்விகடோ (2022) ஆகும்.
இந்த வரிசையில் தற்போது தமிழ் படம் ஒன்று ஆஸ்கரின் நூலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பார்க்கிங்’ பட திரைக்கதை தற்போது ஆஸ்கரின் நூலகத்தில் முக்கிய சேகரிப்பில் நிரந்தர சேகரிப்பாகவுள்ளது. இதனைப் படக்குழு தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கிய இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருந்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல நடிகர்களும் இதில் நடித்திருந்தனர். த்ரில்லர் டிராமா ஜானரில் உருவான இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்ற இப்படம் தற்போது ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.