இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த தமிழ் படத்திற்காக தேசிய விருது பார்க்கிங் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கிய இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருந்தார். 

மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல நடிகர்களும் இதில் நடித்திருந்தனர். த்ரில்லர் டிராமா ஜானரில் உருவான இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்ற இப்படம் தற்போது தேசிய விருது வென்றுள்ளது. மேலும் சிறந்த திரைக்கதை பிரிவில் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும் சிறந்த துணை நடிகர் பிரிவில் எம்.எஸ்.பாஸ்கருக்கும் அறிவிக்கபப்ட்டுள்ளது.