'உறியடி'... பல நல்ல படங்களைப் போலவே வெளிவந்தபொழுது கவனிக்கப்படாமல், வெளிவந்து சில ஆண்டுகள் கழித்து இணையத்தில் பார்க்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு படம். விஜயகுமார் நாயகனாக நடித்து, இயக்கி, தயாரித்திருந்த இந்தப் படத்தை 'சூது கவ்வும்' இயக்குனர் நலன் குமாரசாமி வெளியிட்டார். வெளியான போது பெரிய வெற்றி பெறவில்லை இந்தப் படம். அப்போது விமர்சகர்களாலும், பின்னர் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி-2' படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விஜயகுமார் இயக்கத்தில் இந்த டீமில் '96' புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை யூ-ட்யூப் சினிமா விமர்சகர் அபிஷேக் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் படத்தில் பணியாற்றிய பலரும் மேடையேறி தங்கள் அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்தனர்.

படத்தில் நடித்துள்ள 'பரிதாபங்கள்' புகழ் சுதாகரை மேடைக்கு அழைத்த அபிஷேக், "தமிழ் யூ-ட்யூப் தளத்தின் எல்லைகளை விரிவு செய்த 'பரிதாபங்கள்' புகழ் கோபியா சுதாகரா என்று பலரும் குழம்பும் யூ-ட்யூப் சூப்பர் ஸ்டாரை பேச அழைக்கிறேன்" என்று கூறினார். மேடைக்கு வந்த சுதாகர், கூச்சத்தில் நெளிந்துகொண்டே "பொழைப்பு ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு, அதை குழப்பி விடுறீங்களா? என்னைப் போய் சூப்பர் ஸ்டார்னுலாம் சொல்றீங்க, ஏண்ணே" என்று கூறி பேச ஆரம்பித்தார். "இந்தப் படத்தில் நடித்தது எனக்கு பெரிய வாய்ப்பு. 'உறியடி' படம் வெளிவந்த பொழுது அதைப் பார்த்து வியந்தேன். ஒரு தடவ விஜயகுமாரை டீ கடைல பார்த்து பேசினோம். அதுவே எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. 'உறியடி 2' பண்ணலாமானு அவரே கேட்டது எனக்கு இன்னும் சந்தோஷம். கதையை கேட்டுட்டு எனக்கு உண்மையிலேயே தூக்கம் வரல. அப்படி ஒரு கதை" என்று கூறி அனைவருக்கும் நன்றி சொல்லி முடித்தார். உடனே தொகுப்பாளர் அபிஷேக், "உங்களுக்கு கால் உடைஞ்ச கதையெல்லாம் சொல்லுங்க" என்று சொல்ல, சிரித்துக்கொண்டே "ஆமாங்க... இந்தப் படத்துல ஒரு பெரிய ஸ்டண்ட் பண்ணி என் கால் உடைஞ்சது. இப்போ சரியாகிடுச்சு. அது என்ன ஸ்டண்ட்னு படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க" என்று கூறினார்.
தமிழ் யூ-ட்யூப் ரசிகர்களிடையே புகழ் பெற்ற கோபி-சுதாகர் கூட்டணி தற்போது 'க்ரௌட் ஃபண்டிங்' முறையில் ரசிகர்களிடமிருந்தே நிதி திரட்டி ஒரு புதிய படமொன்றை உருவாக்க இருக்கிறார்கள்.