யூ-ட்யூபில் நகைச்சுவை வீடியோக்களில் நடித்து தங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்கள் கோபி - சுதாகர். இவர்கள் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்திருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என்ற தலைப்பில் உருவாகுவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தை எஸ்ஏகே என்பவர் இயக்க ஜேக்ஸ் பிஜோய் இசையமைப்பதாக இருந்தது. இப்படத்திற்காக க்ரவுட் பண்டிங் முறையில் கோபி மற்றும் சுதாகர் இருவரும் நிதி திரட்டி 'பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தனர். ஆனால் அந்த படம் கொரோனாவிற்கு பிறகு ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அது குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இதனைத் தொடர்ந்து 2023 ஆண்டு இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை விஷ்ணு விஜயன் என்ற அறிமுக இயக்குநர் இயக்க சென்னை பிரசாத் லேப்பில் 2023 ஜனவரி 23ஆம் தேதி அன்று பூஜை நடந்தது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் டைட்டில் டீசர் வெளியிடப்படது. படத்திற்கு ‘ஓ காட் பியூட்டிஃபுல்’(Oh God Beautiful) எனத் தலைப்பு வைக்கப்பட்டது.
இப்படத்தில் விடிவி கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா, கௌதம், பாலகுமாரன், குகன், சாத்விக், ஆழியா, பெனடிக்ட் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே சி ஜோ இசையமைத்துள்ள இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளை பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்ளது. கோபியின் கையில், அரிச்சந்திரன் எழுதிய பொய் சொல்வது எப்படி என்கிற புத்தகம் உள்ளது.