சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்து வர அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் அவருக்கு 100வது படமாக இப்படம் அமைந்துள்ளது.
இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஜனவரியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகுவதாக ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் இப்படம் சகோதரர்கள் பற்றிய படம் என சுதா கொங்கரா ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, சிதம்பரம் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படம் ஏற்கனவே தகவலாக வெளியானது போல் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை ஒரு புரொமோ மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்கள் சிவாஜி நடித்த ‘பராசக்தி’ படத்தை ஒன்றாக அமர்ந்து பார்க்கும் காட்சிகள், சிவகார்த்திகேயன் இரயிலை மறித்து போராட்டம் நடத்தும் காட்சிகள் மற்றும் ரவி மோகன் நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. போராட்ட காட்சியில் ‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் பாரதிதாசன் எழுதிய ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’ வாசகம் அடங்கிய பிரசுரத்தை சிவகார்த்திகேயன் காண்பிக்கிறார்.
இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பாக துணை முதலமைச்சர் உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார். ஏற்கனவே பொங்கல் ரேஸில் விஜய்யின் கடைசி படமாக சொல்லப்படும் ‘ஜன நாயகன்’ ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பராசக்(தீ) பரவட்டும்🔥🔥
— Red Giant Movies (@RedGiantMovies_) September 12, 2025
A stunning ride through history awaits#Parasakthi in Theatres from 14th January 2026@siva_kartikeyan@Sudha_Kongara@iam_ravimohan@Atharvaamurali@gvprakash@redgiantmovies_@Aakashbaskaran@sreeleela14@dop007@editorsuriya@supremesundar… pic.twitter.com/SdgUEdwQCK