2010 ஸ்ரீ காந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘துரோகி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதற்கு முன்னாடி மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். துரோகி படத்தை தொடர்ந்து இரண்டாவது படமாக மாதவனை வைத்து ‘இறுதிச்சுற்று’ படம் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடித்த ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. இப்படம் மூலம் பலரின் கவனம் ஈர்த்து பிரபலமானார் சுதா கொங்கரா. 

இதையடுத்து சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு தேசிய விருதையும் வாங்கி தந்தது. இந்தப் படம் மொத்தம் 5 தேசிய விருதுகளை தட்டி சென்றது. பின்பு இப்படத்தையே இந்தியில் அக்‌ஷௌ குமாரை வைத்து ரீமேக் செய்திருந்தார். அது சரியாக போகவில்லை. இடையே இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக், புத்தம் புது காலை, பாவக் கதைகள் உள்ளிட்ட ஆந்தாலஜி படங்களில் ஒரு குறும்படங்கள் இயக்கியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் மீண்டும் கைகோர்த்தார். அறிவிப்பு வீடியோவும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. அது பின்பு சில காரணங்களால் கைவிடப்பட்டது. இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘பராசக்தி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். சூர்யாவை வைத்து கைவிடப்பட்ட படம் தான் இந்தப் படம் என சொல்லப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

திரைத்துறையில் ஒரு பெண் இயக்குநராக முன்னணி அந்தஸ்தை பெற்றிருக்கும் சுதா கொங்கரா இன்று பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பராசக்தி பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் சுதா கொங்கராவிற்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தில் அவர் பணியாற்றும் காட்சிகளை எடிட் செய்து ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.  

Advertisment