pa.ranjith vikram thangalaan joined rs.100 crore club

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள், ட்ரைலர், டீஸர் என அனைத்தும் ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சுதந்திர தினத்தன்று (15.08.2024) தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் முதல் நாளில் ரூ.26 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து கடந்த 18ஆம் தேதி ரூ.53 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு தெரிவித்தது. இப்படம் இந்தி மொழியில் வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷனுக்காக விக்ரம் மும்பை சென்றிருந்தார். அப்போது அவர் தங்கலான் படம் ரூ.100 கோடி வசூலித்ததாக பேசியிருந்தார்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் தங்கலான் படத்திற்கு கிடைத்த வரவேற்பை கொண்டாடும் வகையில் சில நாட்களுக்கு முன்பு படக்குவினரை அழைத்து விக்ரம் உணவு விருந்து வைத்திருந்தார். இப்படம் வெற்றிகரமாக இரண்டு வாரங்கள் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி திரையரங்கில் ஓடி வரும் நிலையில், படக்குழு சார்பில் இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக போஸ்டருடன் படக்குழு தெரிவித்துள்ளது.