அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பா. ரஞ்சித் ஆதரவு

pa.Ranjith supports Minister Udayanidhi Stalin's opinion

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினாள் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்றார். மீண்டும் தன்னுடைய பேச்சுக்குவிளக்கமளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது. எனது பேச்சை பாஜகவினர் திரித்துக் கூறுகின்றனர். என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்க நான் தயார்'' என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில் இது குறித்துகருத்து தெரிவிக்கையில், “சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேச்சு பல நூற்றாண்டுகளாக சாதி எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சாதி மற்றும் பாலினத்தின் பெயரால் மனிதாபிமானமற்ற செயல்களின் வேர்கள் சனாதன தர்மத்தில் உள்ளது. புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அயோத்திதாசபண்டிதர், தந்தை பெரியார், மகாத்மா பூலே, சாந்த் ரவிதாஸ் போன்ற ஜாதி எதிர்ப்பு சீர்திருத்தவாதிகள் அனைவரும் தங்கள் சாதி எதிர்ப்பு சித்தாந்தத்தில் இதனையே முன்னிறுத்தியுள்ளனர்.

அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து இனப்படுகொலைக்கான அழைப்பு என்று தவறாகப் பயன்படுத்தும் கேடுகெட்ட அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைச்சரின் மீது அதிகரித்து வரும் வெறுப்பு தாக்குதல் மிகவும் கவலையளிக்கிறது. சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் பேச்சுக்கு ஆதரவாக நிற்கிறேன்” எனத்தெரிவித்துள்ளார்.

Pa Ranjith
இதையும் படியுங்கள்
Subscribe