Skip to main content

“சில நேரம் என் மீது வன்மம் வரும்...” -  சந்தோஷத்தில் பா.ரஞ்சித்

Published on 19/08/2024 | Edited on 19/08/2024
pa.ranjith speech in thangalaan thanks giving meet

பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவான திரைப்படம் தங்கலான். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.    இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த சுதந்திர தினத்தில் (15.08.2024) தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.53 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் இப்படம் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற 30ஆம்  தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் விக்ரம், பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.

அப்போது பா.ரஞ்சித் பேசுகையில், “தங்கலான் திரைப்படம் முக்கியமான விவாதத்தை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது சந்தோஷமாக இருக்கிறது. எனக்குள் இருப்பதை திரைக்கதையின் வாயிலாக மக்களிடன் நான் பேச நினைக்கும் வேட்கைதான் தங்கலான் படம். அதை சரியாக புரிந்துகொண்டு கொண்டாடுகிற எண்ணிக்கையில் அடங்காத நிறைய மக்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்த படம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதை பார்க்கும்போது நான் சரியான படத்தைத்தான் எடுத்துள்ளேன் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.
 
இந்த படத்தில் வேலை செய்தவர்கள் கடுமையான உழைப்பை கொடுத்துள்ளனர். அது வெறும் காசுக்காக மட்டும் கிடையாது. என்னுடைய படைப்பின் மீதும், என் மீதும் தீராத காதல் உள்ளவர்கள் மட்டும்தான் எனக்காக இந்த அளவிற்கு வேலை செய்ய முடியும். இது எனக்கு தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற பெரிய பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தரும் அன்புதான் எனக்கு உந்துதலாக இருக்கிறது. சில நேரம் என் மீது வன்மம் வரத்தான் செய்யும். ஆனால் வன்மத்துக்கு பதில் சொல்லும் இடத்தில் நின்றுவிட்டால் காலியாகிவிடுவோம். வன்மத்தைவிட என் மீது அன்பு காட்ட நிறைய பேர் இருப்பது மிகவும் சந்தோஷம். இந்த படத்தை எல்லா இடங்களிலும் கொண்டாட காரணம் நான் பேசும் கருத்தும், கலையும்தான். என்னுடைய கருத்து, சிந்தனை, அன்பை சரியாக புரிந்துகொண்ட பலர் இருக்கும்போது எந்த கவலையும் இல்லை. 

இப்படத்தின் வெற்றி  எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இன்னும் பல காலங்கள் கடந்தாலும் இப்படம் பொக்கிஷமாகக் கருதப்படும். அதற்கான வேலைப்பாடுகள் இந்தப் படத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. நிறைய நடிகர்கள் அவர்களுக்கு ஏற்ற சூழலில் நடிக்கும்போது இந்த அளவிற்கு உழைத்து இந்த படத்தில் விக்ரம் நடித்திருப்பது, அவர் கலையின் மீதும் ரசிகர்கள் மீதும் வைத்துள்ள அன்புதான். அது தீராத போராட்ட குணமுடையதாக உள்ளது. பல பரிமாணங்களுடைய கதாபாத்திரங்களை தேடித் தேடி நடிக்கக் கூடிய ஒரு நடிகராக விக்ரம் இருக்கிறார். அதனால் அவருக்குத் தீனி போடுவது சவாலான ஒன்று. ஆனால் தங்கலான் படம் அவருக்கு ஈடுசெய்யக்கூடிய தீனியாக அமைந்ததில் மகிழ்ச்சி. இந்த மாதிரியான நடிகருடன் நான் வேலை செய்தது எனக்கு சாவாலான மற்றும் மகிழ்ச்சியான விஷயம்” என்றார்.

சார்ந்த செய்திகள்