/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/100_72.jpg)
சென்னை எழும்பூரில் பாந்தியன் சாலை, மிடில்டன் வீதியில் அமைந்துள்ள திரு காம்ப்ளக்ஸின் முதல் தளத்தில் உள்ள நீலம் புத்தக விற்பனை நிலையத்தை நேற்று கமலஹாசன் தொடங்கி வைத்து புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதில் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பா.ரஞ்சித், "சினிமாவை மிக பெரிய கலாச்சார இடமாக பார்க்கிறேன். புத்தகம் வாசிக்க ஆரம்பித்த பிறகு தான் சினிமா மீது நாட்டம் வந்தது. அது தான் சினிமாவை நோக்கி நகர்த்தி சென்றது. சினிமாவை பார்க்கும் போது புத்தகத்தை வாசிப்பது போல் தான் உள்ளது. அப்படி வாசிக்கையில் உலகத்தில் பல ஆளுமைகள் மீது பெரிய ஆர்வம் உண்டாகும். அப்படி உலக ஆளுமைகளில் ஒருவராக கமல் சாரை பார்க்கிறேன்.
கமல் சார், தன்னுடைய திரைப்படங்களில் அடுத்தகட்ட பண்பாட்டு பாய்ச்சலாக நிறைய விஷயங்கள் முயற்சித்துள்ளார். குறிப்பாக எழுத்து பாணியை செழுமைப்படுத்திக் கொண்டே இருந்தார். அவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படங்களை ஆய்வு செய்தாலே, சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான இடத்தை உருவாக்கியிருப்பதை உணர முடியும். கலை பண்பாட்டுத்துறைகளில் படங்களின் பாதிப்பு எந்தளவு முக்கியமாக இருக்கிறது என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.
விருமாண்டி, மகாநதி படங்கள் ஆர்ட் படங்களாக மட்டும் இல்லாமல், அதனை மெயின் ஸ்ட்ரீம் தளத்திலும் கொண்டு போய் சேர்த்ததில் கமலுக்கு மிகப் பெரிய பங்குண்டு. அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார். தன்னை அறியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் பல பேர் இங்கு இருக்கிறோம். அவர்களுக்கு தன்னை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக புத்தகங்கள் இருக்கும்" என்றார் .
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)