
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித், தற்போது விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். நீண்ட காலமாக அவர் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக ‘மார்கழியின் மக்களிசை’ எனும் இசை விழாவை நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த வருடமும் சென்னையில் நேற்று முன்தினம் 28ஆம் தேதி தொடங்கிய இந்த விழா இன்றுடன் நிறைவடைகிறது. நிகழ்வின் முதல் நாள் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நேற்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். மேடையில் யுவன் ஷங்கர் ராஜா, ரசிகர்களுக்காக ஒரு பாடலை பாடினார். அப்போது அவருடன் அருகில் இருந்த பா.ரஞ்சித், விரைவில் யுவனுடன் இணையவுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு யுவனும் "நானும் ரெடி" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ரஞ்சித், "இளையராஜா என்பது ஒரு உணர்வு. அவரது பாடல்களைக் கேட்கும் போது அவ்ளோ எமோஷனலாக இருக்கும். அவரை பார்த்துத் தான் திரைத்துறைக்கு வந்தேன். அப்படி தான் யுவன் ஷங்கர் ராஜாவையும் பார்க்கிறேன். இவரது இசையும் பலமுறை நான் துன்பத்தில் இருக்கும் போது, அதிலிருந்து மீள உதவியது. இந்த மேடையில் யுவன் நிற்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இது மிகவும் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கிறேன். இங்கு யாரையும் யாராலும் தடுத்திட முடியாது. அதற்கு இது ஒரு பெரிய உதாரணம். இதனால் நிறைய கலைஞர்கள் தடைகளை உடைத்து மேலே வருவார்கள்" என்றார்.