Skip to main content

“அதுதான் எங்க அம்மா... அதுதான் நான்...” - எமோஷ்னலான பா. ரஞ்சித்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
pa.ranjith speech in blue star success meet

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த வெற்றியைப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வெற்றி விழா நடத்தியது படக்குழு. அதில் பா. ரஞ்சித், அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அப்போது பா. ரஞ்சித் பேசுகையில், “இந்த படம் ஒரு விவாதத்தை உருவாக்கியிருக்கு. இந்த படத்தில் எனக்கு ரொம்ப புடிச்ச சீன். ராஜேஷ் முதலில் ரஞ்சித்தின் அம்மாவை சுசீலா என பெயர் சொல்லி கூப்பிடுவான். அதுதான் இயல்பு. ஊர் தெருவில் இருக்கும் ஒருவர், இங்க இருக்கிற வயசான தாத்தாவை பேர் சொல்லி கூப்பிடுவான். ஆனால் அதே ராஜேஷ், இன்னொரு சீனில் அம்மா என கூப்பிடுவான். இந்த சீன் தான் படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்.

அம்மா என ராஜேஷ் சொன்னதும், வாஞ்சையோடு வாப்பா... உட்காருப்பா என அந்த அம்மா சொல்வாங்க. அந்த சுசீலா தான் எங்க அம்மா. அதுதான் நான், ஜெய். ப்ளூ ஸ்டார் உங்களோடு முரண்படுவதற்கும் சண்டையிடுவதற்கும் எங்க விருப்பமே கிடையாது. பொதுவில் பங்கு கோருதல். பொது என்றால் கிராமம், அந்த கிராமத்தோடு நாம் சேர்ந்து வாழணும். வேறுபாடற்ற ஒரு இடத்தில் இருக்கணும். உங்களுடைய கோயில், சாமி எங்களுடையதும் தான். அப்பா, அம்மா என எல்லாரும் ஒன்னா இருக்கணும். அப்படி ஒன்னா இருந்தால் தான் இங்க இருக்கிற வேறுபாட்டை நம்மால் உடைக்க முடியும். இதை அழுத்தமாக பேசுன படம் தான் ப்ளூ ஸ்டார்.

அதேபோல அந்த சீனுடைய தொடர்ச்சியா ரஞ்சித் அழுவான். அதை பார்த்தபோது நானும் தேம்பி தேம்பி அழுதேன். அந்த வலி எல்லாருக்கும் புரிய வேண்டுமென்றால், அந்த கதாபாத்திரம் போல் ஒரு நாள் உணர்ந்தாலே போதும். உங்க வயசுல இருக்கிற ஒருத்தன், சாதி திமிரில், மதத் திமிரில் உங்க அம்மாவை பேர் சொல்லி கூப்பிடறப்போ, அந்த பையனுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும். அந்த வலி எவ்வளவு கோவம் கொடுத்திருக்கும். அந்த கோவத்தை இயக்குநர் காதலி மூலமாக சரியாகிவிடும் என கடக்க செய்கிறார். ஆனால் அதே டைரக்டர், ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தை மாற்ற ட்ரை பண்ணுறார். அந்த மாற்றத்தை விரும்பக்கூடிய மனிதர்கள் தான் நாங்கள். அதை தான் எங்களுடைய சினிமா பேசும். பேசித்தான் ஆக வேண்டும். அந்த பிரச்சனை இன்னமும் இருக்கு.

எங்கள் தத்துவத்தை சரியான மொழியில் மக்களிடம் சேர்க்க வேண்டும். அதை மக்கள் விரும்புகிறப்போ, வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடையுது. அந்த வெற்றியின் மூலம் பல பேருக்கு நம்பிக்கை கிடைக்குது. அந்த நம்பிக்கை சமூகத்தில் முடிந்த அளவிற்கு ஒரு மாற்றத்தை உருவாக்கும் என நம்புறோம்” என்றார். 

சார்ந்த செய்திகள்