இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பா.ரஞ்சித் தற்போது தங்கலான் பட பணிகளில் உள்ளார். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே நீலம் புரொடக்ஷன் மூலமாக படங்களையும் தயாரித்து வருகிறார். இதில் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் தண்டகாரண்யம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளது.
இந்த நிலையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை டாக்டராக இருந்து இயக்குநராக மாறி மூன்று தேசிய விருதுகள் வாங்கிய மலையாள இயக்குநர் டாக்டர்.பிஜு இயக்குகிறார். ரிதாபரி சக்ரவர்த்தி மற்றும் பிரகாஷ் பாரே ஆகியோர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாப்பா புக்கா (Papa Buka) என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் ரிக்கி கேஜ் இசை இசையில் உருவாகிறது. இப்படம் இந்திய வரலாற்று ஆசிரியர்களான ரொமிலா மற்றும் ஆனந்த் இருவரும், இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலியப் படைகளுடன் போரிட்ட இந்திய வீரர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுத, பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பிக்கு செல்கின்றனர். அவர்களுக்கு 80 வயதான போர் வீரர் ஒருவர் வழிகாட்டியாக உதவுகிறார். இந்த பயணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்கி கேஜ் இசையமைக்கும் இப்படத்தை நீலம் புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து பல நிறுவனங்கள் தயாரிக்கிறது. நீலம் மற்றும் சிலிக்கான் மீடியா ஆகிய இந்திய நிறுவனங்களுடன் பப்புவா நியூ கினி நாட்டின் ‘நேட்டிவ் ஆர்ட்ஸ் அண்ட் ஃபேஷன் அகாடமி’யும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பு போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இரு நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் ஒரு படத்திற்கு இணைந்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜுன் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பப்புவா நியூ கினியா இணைந்து தயாரிக்கும் முதல் படமாக இப்படம் உருவாகிறது.