
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் பா.ரஞ்சித் மற்றும் பாலாஜி சக்திவேல் கலந்துகொண்டனர். அப்போது பா.ரஞ்சித் பேசுகையில், “இந்திய சினிமா, ஆரம்பகாலக்கட்டத்தில் புராண சினிமாக்களை உருவாக்கி வந்தது. பின்பு சுதந்திரம் பேசும் சினிமாக்களை உருவாக்கியது. அதையடுத்து தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. திராவிடக் கட்சிகளை பற்றியும் அவர்களது கொள்கைகளைப் பற்றிய்ம் பேசும் படங்கள் வெளிவந்தது. அந்தச் சமயத்தில் தான் அண்ணாதுரை, கலைஞர், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற நிறைய சமூக செயற்பாட்டாளர்கள் வந்தார்கள். அவர்கள், சினிமாவை சமூக ரீதியாக புரிந்து, மக்களுக்கு சமூக கருத்தை சேர்த்து, ஒரு பிரச்சார யுக்தியாக பயன்படுத்தினார்கள். தமிழகத்தில் இது முக்கியமான மாற்றமாக அமைந்தது. திராவிட இயக்கங்கள் எல்லா கலை இலக்கிய ஊடகத்தையும் தங்களது பிரச்சாரத்திற்காக பயன்படுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் காலகட்டம் வருகிறது. அப்போது நாயகன் பிம்பம் ஆரம்பமாகிறது. திராவிட ஆட்சி உருவானதும் சினிமா கமர்ஷியலை நோக்கி வேறொன்றாக மாறுகிறது. அதில் தான் கமல், ரஜினி வருகிறாரக்ள். இதே காலக்கட்டத்தில் இன்னொரு மாற்றம் நிகழ்கிறது. பாரதிராஜா, பாலுமகேந்திரா வருகிறார்கள். அதன் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகிறது. பாலுமகேந்திரா படங்கள் அழகியலைப் பேசியது. பாரதிராஜா படங்கள் எளிய மக்களின் வாழ்வியலைப் பேசியது.
இந்தச் சூழலில் வேறொன்றுக்கு சினிமா மாறியது. 90 களில் சினிமாவில் சாதிய படஙகள் வர தொடங்கியது. தேவர் மகன், சின்னக்கவுண்டர், பெரியவீட்டு பண்ணைக்காரன் என ஏகப்பட்ட படங்கள் வந்தது. சமூக சீர்திருத்தத்தை பேசிய தமிழ் சினிமாவில், நான் இந்தச் சாதிடா, எனக்கு இப்படி ஒண்ணு இருக்குடா, அப்புடி ஒண்ணு இருக்குடா... என முற்றிலும் வேறொரு விஷயம் நடந்தது. இது மொத்தமாக சினிமாவின் முகத்தையே மாற்றி தன்னுடைய சாதி பெருமைகளை இயல்பாக பேசியது. இது விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டதா என்றால் இல்லை. அது ஏன் விவாதத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பது முக்கியமான கேள்வி. இன்றைக்கு ஒரு படம் எடுக்கிறோம் என்றாலே, ரொம்ப ஆரோக்கியமா இருக்கிற சினிமாவில் ஏன் பட்டியல் சாதிய மனநிலையில் இருந்து படமெடுக்குறீர்கள், படமெடடுப்பதால் தான் சாதிய புத்தியே வருகிறது, இதுவரை நாங்க சாதியே பார்த்ததில்லை, நீங்க தான் வந்து இதை மாத்திட்டீங்க என்ற ஒரு கதை இருக்கு. அந்தக் கதைக்கு முன்னாடி, வந்த சாதிய படங்களுக்கு ஏன் கேள்வி எழுப்பவில்லை.
பராசத்தி போன்ற அரசியல் எழுச்சியை உருவாக்கிய தமிழ் சினிமாவில், அதற்கு முரணாக சாதிய பெருமைகளை பேசிய படங்கள் பெரியளவு வந்தபிறகும் எந்த விவாதங்களும் நடக்கவில்லை. யாருமே விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படவும் இல்லை. பொது தளத்தில் எந்தக் கேள்வியும் எழுப்பபடாமல் ரொம்ப இயல்பா நடந்திட்டு வந்தது. இப்பவும் அது தொடர்கிறது. நமக்கு எதிரா எடுக்கிறோம் என்ற பெயரில் வேறொரு பெயரில் நடக்கிறது. என்னைப் பொறுத்தவரை அந்த சினிமாக்கள் எதிரான சினிமாவே இல்லை. அது இயல்பான சினிமா. ஆரம்பகாலக்கட்டதிலிருந்து இருக்கிற தமிழ் சினிமா தான் அது. அதற்கும் இப்ப எடுக்கிற சினிமாவிற்கும் எந்தவிதமான வேறுபாடும் எனக்கு தெரியவில்லை” என ஆதங்கத்துடன் பேசினார்.