இயக்குநர் பா. ரஞ்சித், 'நீலம் புரொடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருக்கின்றன. கடைசியாக ப்ளூ ஸ்டார் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், நீலம் தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படத்தின் அறிவிப்பை பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்க ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'J.பேபி' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது.
இதையடுத்து இப்படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ப்ளூ ஸ்டார் படநிகழ்ச்சியில் இப்படம் விரைவில் வெளியாகும் என ரஞ்சித் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று மாலை இப்படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளதாகத்தெரிவித்தார். மேலும் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரித்த படங்களுக்கு முதல் முறையாக எந்த சீனும் கட் செய்யப்படவில்லை என்றும் எந்த வசனங்களும் மியூட் செய்யவில்லை என்றும் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இப்படம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் “தாயை விடத்தூய்மையான மந்திரம் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.