தமிழில் தனது கதை தேர்வின் மூலமாகவும் நேர்த்தியான நடிப்பாலௌம் ரசிகர்களை கவர்ந்தார் தினேஷ். முதல் பட வெற்றியால் அட்டகத்தி தினேஷ் என அழைக்கப்பட்டவர் கடந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து பட வெற்றியால் அப்படத்தின் கதாபாத்திர பெயரான கெத்து தினேஷ் என அழைக்கப்படுகிறார். இவரது நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளியான ‘தண்டகாரண்யம்’ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்து அவரது இயக்கத்தில் தினேஷ் நடித்து வரும் படத்தின் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளார். ஆனால் படத்தின் பெயர் குறிப்பிடவில்லை. இருப்பினும் வேட்டுவம் படத்தில் நடித்து வரும் ஆர்யா, ஷோபிதா துலிபாலா, கலையரசன் ஆகியோரை டேக் செய்துள்ளார். ஆர்யா இதில் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
கிளிம்ப்ஸில் நீளமுடியுடன் தினேஷ், மல்லர் கம்பம் விளையாட்டில் ஈடுபடுகிறார். இந்த காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது. இப்படம் தற்போது படப்பிடிப்பில் இருப்பதாகவும் பா.ரஞ்சித்தின் 8வது படமாக உருவாகுவதாகவும் கிளிம்ப்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கலான் படத்திற்கு பிறகு மீண்டும் பா.ரஞ்சித் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இந்தப் படத்தில் இணைகிறது. இப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.