ADVERTISEMENT

"சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்" - பா. ரஞ்சித் கடும் கண்டனம்

10:25 AM Aug 12, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை ஒரு வார காலம் பள்ளிக்கு போகாமலே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்த போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த தொந்தரவு செய்த மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பிரபலங்களைத் தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாகப் புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கிக் கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT