Skip to main content

"சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்" - பா. ரஞ்சித் கடும் கண்டனம்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

pa.ranjith about nanguneri issue

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை ஒரு வார காலம் பள்ளிக்கு போகாமலே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்த போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த தொந்தரவு செய்த மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2  மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பிரபலங்களைத் தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு!  சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள். 

 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாகப் புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கிக் கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு; உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Case against Nayanar Nagendran; Trial in the High Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் 7 நாள்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து மூலம் நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைப்பற்றப்பட்ட பணம் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் இருந்து போட்டியிட தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு நாளை (18.04.2024) விசாரிக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.