Advertisment

“நான் என்ன ரவுடியா?” - பா.ரஞ்சித் ஆதங்கம்

pa.ranjith about madras movie

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளர், பி.சி ஸ்ரீ ராம், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பா. ரஞ்சித் பேசுகையில், “அரசுப் பள்ளியில் படித்த மாணவன் தான் நானும். நம்ம ஊரில் படிக்கும் போது கெத்தா இருக்கும். ஆனால் அங்கிருந்து கொஞ்சம் வெளியே வந்தால், தாழ்வு மனப்பான்மை வருவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கு. நாம் கத்துக்கிற கல்வி போதுமானதாக இருக்கிறதா அல்லது நம்ம கத்துகிட்டது தான் கல்வியா என கேள்வி இருக்கிறது. நான் ஸ்கூல் படிக்கும் போது இங்கிலீஷில் ஃபையில். ஆனால் கல்வி கூடங்கள் ஒரு பாசிட்டிவான உணர்வை உருவாக்கியது. அது தான் எனக்கு ஒரு சுதந்திரத்தை கொடுத்தது. நான் படித்ததை விட வரைந்தது தான் அதிகம். நான் என்னவாக ஆக வேண்டும் என்ற யோசனையை கொடுத்தது அரசு பள்ளி மற்றும் கல்லூரி தான்.

Advertisment

நான் சினிமாவில் ஒரு கதை சொன்னால் ரொம்ப டார்க்காக இருக்கு என சொல்வார்கள். மெட்ராஸ் பட கதையை சொன்ன போதும் இப்படித்தான் சொன்னார்கள். ஸ்லம்சார்ந்த கதைகள் என்றாலே ஒரு டார்க் பக்கம் என அவர்களது பார்வை. ஆனால் ஸ்லம்மில் வாழ்ந்த நான், என்னுடைய வாழ்க்கை டார்க்காக இருந்ததில்லை. பயங்கர கலர்ஃபுல்லாகவும், சந்தோஷமாகவும் கொண்டாட்டமாகவும் இருந்திருக்கிறது. ஒரு ஸ்லம்மின் வாழ்க்கை என்றாலே ரொம்ப இருட்டு, சோகம் போன்ற எண்ணங்கள் ஏற்கெனவே அவர்களுக்கு இருக்கு. அந்த எண்ணங்களை உடைப்பது பெரிய விஷயமாக பார்த்தேன். அதனால் தான் மெட்ராஸ் படத்தில் கலர்ஃபுல்லாக காட்ட வேண்டும் என எந்த முயற்சியும் எடுக்கவில்லை. உண்மையிலே ஒரு ஸ்லம் எப்படி இருக்குமோ அதை அப்படியே காண்பித்தோம். படத்தை பார்த்த சென்சார் போர்டு ஏ ப்ளஸ் சான்றிதழ் தருவதாக சொன்னார்கள். ஏன் என கேட்டதற்கு, ஸ்லம்பற்றி தான படமெடுத்திருக்கீங்க, ஸ்லம்மில் இருக்குற மக்களுக்கு மட்டும் காட்டுங்க, அதற்காக ஒரு சான்றிதழ் உருவாக்குகிறோம் என்றனர். அதோடு ரௌடிகளுக்கான படம் என்றும் சொன்னார்கள். நீங்கள் எப்படி ஸ்லம் பகுதியில் வாழும் மக்களை ரவுடிகளாக சித்தரிப்பீர்கள். நானும் அங்கிருந்துதான் வந்தேன். நான் ரவுடியா என வாதிட்டேன். ஆனால் மெட்ராஸ் படம் தமிழ் சினிமாவில் புது கோணத்தை உருவாக்கியது. இப்போது கொஞ்சம் ஈசியான பாதையாக மாறியிருக்கிறது.‘ப்ளூ ஸ்டார்’ படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டாடியுள்ளனர். இந்த கோணத்தை இங்கிருக்கும் புகைப்படங்கள் மாற்றியிருக்கின்றன. பள்ளிக்கல்வி துறையின் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது.

Advertisment

அதே போல் அட்டகத்தி படத்தை பார்த்துவிட்டு ஒருவர் இந்த படம் ஆரண்ய காண்டம் படம் போல் இருக்கிறது என்றார். இரண்டு படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. வெவ்வேறு கதைகளைச் சொன்னாலும், ஸ்லம் கதைக்களத்தில் நடப்பதாக இருந்தாலே ஒரேமாதிரி எண்ணம் தான் அவர்களுக்கு இருக்கு. அந்த கோணத்தை மாற்றுவது முக்கியம் என கருதுகிறேன்” என்றார்.

pa.ranjith
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe