தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறுமுகமங்கலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சந்திரசேகர் - தமிழ்ச்செல்வி தம்பதியரான கவின் (எ) செல்வகணேஷ். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற அவர், தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனை வாசலில் காத்திருந்த போது, அங்கு வந்த ஒரு இளைஞர் கவினை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்பவர், கவினை நான் தான் கொலை செய்தேன் என பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜரானார். அவர் கொடுத்த வாக்கு மூலத்தில், கவினும் சுர்ஜித்தின் அக்காவும் பள்ளி பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கவின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இது சுர்ஜித்துக்கு பிடிக்கவில்லை. அதனால் கவினை வெட்டி படுகொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் இப்போது நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் மணிமுத்தாறு ஆயுதப்படையின் தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியனில் எஸ்.ஐ.யாகப் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கும் தனது மகள் கவினிடம் பழகி வந்தது பிடிக்கவில்லை என சொல்லப்படும் நிலையில் அவர்களின் தூண்டுதலின் பேரில் தான் சுர்ஜித் கொலை செய்ததாக கவினின் உறவினர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் அவரது கிருஷ்ணவேணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரிடமும் விசாரணை நடந்து வரும் நிலையில், அவர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஆணவக் கொலை சம்பந்தமாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே திரைப் பிரபலங்களும் கண்டனங்கள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். கமல்ஹாசன், இயக்குநர் மாரி செல்வராஜ், ஜி.வி.பிரகாஷ் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக கண்டனங்களை தெரிவித்தனர். இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், அவர் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்றவாளியாகத் சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்னும் கைது செய்யப்படவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் படி, வன்கொடுமை சம்பவம் நடந்தவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிறது. இதுவரை ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவில்லை. உடனடி ஊடக வெளிச்சம் கிடைக்கும் நவீன காலத்திலும் ஒவ்வொரு முறை இத்தகைய சம்பவங்கள் நிகழும்போது, பட்டியலின மக்கள் போராடித்தான் குறைந்தபட்ச நீதியைப் பெற வேண்டியிருக்கிறது, அப்படித்தான் கவினின் பெற்றோர்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
தலித் வழக்குகளைக் கையாள்வதில் முந்தைய அரசு பின்பற்றிய அதே அலட்சியத்தைத் தான் இந்த அரசும் பின்பற்றுகிறது. சட்டம் ஒழுங்கு பல நிலைகளில் சீர் கேட்டு போயிருக்கும் சூழலில், இந்த ஆணவக்கொலைக்கு காரணமான சுர்ஜித்தின் பெற்றோர்கள் காவல்துறையைச் சேர்நதவர்களாக இருக்கும்போது, இந்த வழக்கு எப்படி கையாளப்படும் என்கிற சந்தேகம் வலுக்கிறது. இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் அளிக்காமல் தமிழ்நாடு அரசு மிக வெளிப்படையாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சாதியக் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன என்கிற நிதர்சனத்தை ஏற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, அரசு வேலை என்பதோடு முடித்துக்கொள்ளாமல், சாதிப் பிரச்சினைகள் அதிகம் உள்ள மாவட்டங்களைக் கூடுதல் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட வேண்டும்.
திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதிகளின் படி (Atrocity Prone Areas) வன்கொடுமை அதிகம் நடக்கும் பகுதிகளாக அறிவித்து, அங்கு சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்த கணமே, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த அடிப்படை சட்ட விதிகளைக் கூட காவல்துறை பின்பற்றுவதில்லை. இதைத்தான் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டி இருந்தது.
சாதியக் குற்றங்கள் ஒவ்வொரு முறை நிகழும்போதும், சம்பவம் நடந்த கணமே ஊடகத்தில் மாற்றுக் கதையாடல்களை உலவ விடும் போக்கை, காவல்துறையினர் கைவிட வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டுப் பட்டியலினச் சமூக மக்களின் சமூக உரிமை மற்றும் மாண்பை மதித்து, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு, பட்டியலின மக்களோடு துணை நிற்க வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்புணர்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். பள்ளியில் நிலவும் சாதியப் பாகுபாடுகளைக் களைய நீதிபதி சந்துரு தலைமையில் அமைத்த குழுவைப் போல, ஆணவக்கொலைகளைத் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி, தலித் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படவேண்டும்.
ஆணவக்கொலைகளைப் போர்க்கால அடிப்படையில் அணுகி, கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், இத்தகைய குற்றங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கான எல்லா சமூக காரணிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்ட கோரிக்கையைத் புறக்கணித்து வரும் திமுக அரசையும் அதன் கூட்டணிக்கட்சிகளையும் கண்டிக்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை தமிழ்செல்வி - சந்திரசேகர் தம்பதியினரின் மூத்த மகன் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், 27.07.2025 அன்று ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று கவின் தனது தாயோடு தாத்தாவின் மருத்துவச் சிகிச்சைக்காக… pic.twitter.com/tSdfVGDCjp
— pa.ranjith (@beemji) July 29, 2025