Skip to main content

வாஜ்பாயின் பயோ-பிக்கில் பிரபல நடிகர் - படக்குழு அறிவிப்பு

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

pankaj tripathi is play lead role in vajpayee biopic

 

இந்திய சினிமாவில் பல பயோ-பிக் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழக்கையைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டன. 

 

ad

 

அந்த வரிசையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்க, உத்கர்ஷ் நைதானி கதை எழுதுகிறார். இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். 

 

இந்தப் படம் தொடர்பாக நடிகர் பங்கஜ் திரிபாதி, "இப்படிப்பட்ட மனிதாபிமான அரசியல்வாதியை திரையில் காட்டவுள்ளது எனக்கு பெருமை. அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் புகழ்பெற்ற கவிஞர். அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற ஒரு நடிகருக்குக் கிடைத்த பாக்கியம்" என்று கூறியுள்ளார். 

 

முன்னதாக வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளதாக அவர் மறைந்த அடுத்த ஆண்டு, அதாவது 2019ல் இதற்கான அறிவிப்பு வெளியானது. மேலும் ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் வெளியான புத்தகத்தைத் தழுவி, அதே பெயரில் படம் தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் ஷிவ ஷர்மா கூறினார். அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

பிரபல விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன்

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

Madhavan to act in GD Naidu's biopic

 

தமிழ் மற்றும் இந்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் மாதவன்,  'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தை தொடர்ந்து இந்தியில் 'தோகா' படத்தில் நடித்திருந்தார். தமிழில் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மீடியாஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

 

இந்த நிலையில், மாதவன் அடுத்ததாக தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார்.‌ இப்படத்தில் ஜி.டி.நாயுடு படைத்த சாதனைகளை பற்றி பேசவுள்ள இப்படத்திற்காக ஜி.டி.நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன் மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் படக்குழு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.