சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்தை பசங்க, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 1000க்கும் மேற்பட்ட திரைகளில் நேற்று(25.07.2025) வெளியானது.
கலகலப்பான அம்சங்களுடன் கணவன் மனைவி உள்ளிட்ட குடும்ப உறவுகளை பேசும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து தெலுங்கில் ‘சார் மேடம்’ என்ற தலைப்பில் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் வரவேற்பு குறித்து பாண்டிராஜ் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
செய்தியாளர்கள் முன் பாண்டிராஜ் பேசுகையில், “என்னுடைய படம் வந்து மூன்று வருஷம் ஆகிவிட்டது. ரொம்ப எமோஷ்னலா இருக்கு. படத்துக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை கொடுக்குது. படம் பார்க்காதவங்க கண்டிப்பா போய் தியேட்டர்ல பாருங்க. 2 மணி நேரம் ஜாலியா சிரிக்கிற படம் மாதிரி இருக்கும். 20 நிமிஷம் ஃபீல் பண்ணுற மாதிரி இருக்கும். விஜய் சேதுபதி ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கார். ஃபோன் பண்ணி, அவருக்கு நிறைய ஃபோன் கால் வருவதாக சொன்னார். மேலும் எந்த படத்துக்கும் இந்த அளவு ஃபோன் வந்ததாக சந்தோசப்பட்டார். படத்தின் வரவேற்பை பொருத்து பார்ட் 2 எடுப்பது பற்றி முடிவெடுப்போம். ” என்றார்.