/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/309_10.jpg)
சசிகுமார் நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த 20ஆம் தேதி வெளியான படம் நந்தன். இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி பெரியசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வில்லன் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் பட்டியலின மக்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமான காட்சிகள் மற்றும் வசனங்களுடன் பேசியிருக்கின்றனர். இப்படத்திற்கு நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பல்வேறு ஊர்களில் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கும் பட்டியலின மக்களுக்கு இந்தப் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இது தொடர்பான வீடியோவை இயக்குநர் சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், படம் பார்த்து முடித்துவிட்ட பஞ்சாயத்து தலைவர்கள் சசிகுமார் மற்றும் இயக்குநர் சரவணனிடம் கண்ணீர் மல்க தங்களுக்கு நடந்த சம்பவங்களை பகிர்கின்றனர்.
மேலும் தங்களுக்கு நடந்ததை விரிவாக பேட்டி கொடுத்துள்ளனர். அதில் எல்ராம்பட்டு கிராம ஊராட்சியின் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் வித்யா என்பவர், “எனக்கு சுயமரியாதை என்பதே கொடுக்கப்படுவதில்லை. அதை இழந்துவிட்டு தான் உட்காந்திட்டு இருக்கோம்” என்றார். மற்றொருவர், “நந்தன் படத்தில் காட்டியது போல ஜட்டியோடு என்னை ஓடவிட்டு அடிச்சாங்க. அந்த வலி எனக்கு தெரியும்” என கண்கலங்கிய படி பேசினார். இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘நந்தன்’ படம் பார்த்து சசிகுமாரிடம் கண் கலங்கிய தலித் பஞ்சாயத்து தலைவர்கள்… படத்தில் காட்டப்பட்டுள்ள அத்தனை காட்சிகளும் தங்கள் வாழ்வில் நடந்த நிஜங்களாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள். நிஜ நந்தன்களின் கண்ணீர், நிச்சயம் உங்கள் மனதை உலுக்கும்… #Nandhan#நந்தன்pic.twitter.com/6zdmkuB8eA
— இரா.சரவணன் (@erasaravanan) September 24, 2024
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)