
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் இன்று. பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞரும், பாடலாசிரியருமான பழனிபாரதி இசையமைப்பாளர் யுவனின் இசையில் எழுதிய பாடல்கள் குறித்துச் சொல்லி தனது சமூகவலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் “இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை அறிமுகமான படம் 'அரவிந்தன்.' அப்போது அவர் அகவை 18. ஆல் தி பெஸ்ட்,ஆல் தி பெஸ்ட் என்று அவரை வாழ்த்தும் குரலோடு "காதல்...காதல்... என்றே பூக்கள் பூக்கும் ஓசை காதில் கேட்கும் '' என்று முதற்பாடல் ஒலிப்பதிவானது. பாடல்களை நான் எழுதினேன்.
"ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே" இப்படி அடுத்தடுத்து எழுத என்னை ஈர்த்த இசை யுவனுடையது. சிரிப்பும் விளையாட்டும் குறும்பும் ஒருபுறம், நுட்பமாக நடக்கும் இசைக்கோப்புப் பணி மறுபுறம். பாடல் முடிந்து கேட்கும் தருணம் இசைஞானி 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்' புகழ் யுவனின் பாட்டில் பரவி மணம்பரப்பும்.

யுவன் இசையில், அரவிந்தன், நந்தா, காதல் கொண்டேன், பேரழகன், பூவெல்லாம் கேட்டுப் பார், உனக்காக எல்லாம் உனக்காக, பாலா, புன்னகைப் பூவே உட்பட பல படங்களில் பாடல் எழுதியிருக்கிறேன். எழுதும் வரிகளில் அவர் எப்போதும் குறுக்கிட்டதில்லை. "செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே, சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே,சுற்றும் பூமியில் இன்பம் கொட்டிக் கிடக்கிறது நம்மை அழைக்கிறது" அதுதான் யுவனின் இசை ராஜா வீட்டுக் கண்ணுக்குட்டிக்கு இனிய தாலாட்டுநாள் வாழ்த்துகள்” என்றிருக்கிறார்.