பாகிஸ்தானில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களின் மூலமாகவும் பிரபலமானவர் ஹுமைரா அஸ்கர். இவர் மாடலாகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இது அங்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான தகவலில் நடிகை ஹுமைரா அஸ்கர், பாகிஸ்தான் கராச்சி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாகவே அவர் வாடகை செலுத்தவில்லை என்பதால் வீட்டின் உரிமையாளர் அது குறித்து கேட்க நடிகையை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவரால் நடிகையை நெருங்க முடியவில்லை. இதனால் நீதிமன்றத்தில் முறையிட்டு நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். இவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் காவல் துறையை வீட்டிற்கு சென்று விசாரிக்கும் படி உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் துறை நடிகை வசிக்கும் வீட்டிற்கு சென்றுள்ளது. கதவை தட்டிய பிறகு எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. பின்பு நடிகை சடலமாக கிடந்துள்ளார். அவரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இப்போது உடற்கூராய்வு அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். இருப்பினும் மருத்துவ வட்டார தகவலின் படி நடிகை இறந்து இரண்டு வாரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.