Skip to main content

கார்த்திக்கு பதில் ஆர்யா; செகண்ட் பார்ட் மூலம் கம் பேக் கொடுக்க திட்டமிடும் லிங்குசாமி 

 

Paiyaa 2 arya play a lead role under Lingusamy direction

 

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி, தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டை இப்பட பாடல்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. 

 

இந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்ததைத் தொடர்ந்து 'பையா 2' வில்  ஆர்யா நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னதாக ஆர்யாவை வைத்து 'வேட்டை' படத்தை இயக்கினார் லிங்குசாமி. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக 'பையா 2' வில் இருவரும் இணையவுள்ளதாகத் தெரிகிறது.

 

மேலும் கதாநாயகியாக மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஜான்வி கபூர் நடிக்கும் பட்சத்தில் இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுப்பார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த லிங்குசாமி, 'அஞ்சான்' பட தோல்விக்குப் பிறகு நல்ல கம் பேக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தனது வெற்றிப் படங்களில் ஒன்றான 'சண்டக்கோழி' படத்தின் அடுத்த பாகத்தை எடுத்தார். இந்த யுக்தியும் அவரைக் கைவிட தெலுங்கு பக்கம் சென்று ராம் பொத்தினேனியை வைத்து 'தி வாரியர்' படத்தை எடுத்தார். இதுவும் எதிர்பார்த்த அளவு போகாததால் தற்போது மீண்டும் இரண்டாம் பாக யுக்தியை கையில் எடுத்துள்ளார். இந்த முறை அது கைகொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.