/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/137_40.jpg)
சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா. பின்பு பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் என சில படங்களில் நடித்திருந்தார். 2010ஆம் ஆண்டு வெளியான ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தில் நடித்த அவர் அதற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு ராம் இயக்கி நடித்த தங்க மீன்கள் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பிறகு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. முழுவதும் மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தமிழ் இயக்குநர் ஒருவர் தன்னை அறைந்ததாக பத்மப்ரியா பேசியுள்ளார். கேரளா கோழிக்கோடு பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “ஒரு பெண் பிரச்சனைகளைப் பற்றி பேசினால், அவர்களே பிரச்சனையாக மாறிவிடுகிறார்கள். மிருகம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது இயக்குநர் சாமி என்னை அறைந்தார். இதைப் பற்றி சங்கத்தில் புகார் அளித்ததால், ஏற்கனவே நான் ஒப்புக்கொண்ட படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.
அந்த இயக்குநருக்கு ஆறு மாதங்கள் படம் இயக்க தடை விதித்தனர். ஆனால் ஊடகங்களில் நான் தான் இயக்குநர் சாமியை அறைந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தவறாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்கக்கூடாது என்று அப்போது முடிவெடுத்தேன்” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கேங்க்ஸ்டர்கள் போன்ற கதாபாத்திரங்கள் ஆண்களாகவும் அழகான இளம் வயதினர், பலவீனமானவர்கள், நடனக் கலைஞர்கள் போன்ற கதாபாத்திரங்கள் பெண்களாகவும் இருக்கின்றனர். பாலின பாகுபாடு தொடர்ந்து இருந்து வருகிறது. அதைப் பற்றி நாம் பேச வேண்டும். பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.மிருகம் படத்தில் நடித்தற்காக தமிழ்நாடு மாநில விருது பத்மப்ரியா வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)