
பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தின் கதை கர்நாடகாவின் கே.ஜி.எஃப். பகுதியில் வாழ்ந்த மக்களைப் பற்றி உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இப்படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தது அதில் முதல் பாடலான ‘மினிக்கி மினிக்கி...’ லிரிக் வீடியோ கடந்த ஜூலை 17 தேதி வெளியானது. இப்பாடலை உமா தேவி எழுதியிருக்க சிந்துரி விஷால் பாடியிருந்தார். சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ‘வார் சாங்’வெளியானது. இப்பாடலை ராப் பாடகர் தெருக்குரல் அறிவு எழுதி ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து பாடியுள்ளார்.
இந்நிலையில் படத்தை புரமோஷன் செய்யும் விதமாக, ‘மினிக்கி மினிக்கி...’பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வெளியிடுவோர்க்கு தங்க நாணயம் தருவதாக ஸ்பெஷல் ஆஃபரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சிறந்த ரீல்ஸாக 20 ரீல்ஸை தேர்வு செய்து 20 தங்க நாணயம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. வெற்றிபெறுபவர்கள் படக்குழுவினருடன் இணைந்து உணவு அருந்தும் வாய்ப்பையும் படக்குழு ஏற்படுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.