இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கெத்து தினேஷ், ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டுவம்’. இப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் விழுந்தமாடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. அந்த வகையில் விழுந்தம்பாடி கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி நடந்த படப்பிடிப்பில் கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது காரை இயக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் எஸ். மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.  

இந்த உயிரிழப்பு சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்போரை பதைபதைக்க வைத்தது. இந்த விபத்து தொடர்பாக பா.ரஞ்சித் உட்பட நான்கு பேர் மீது அலட்சியமாக செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளின் கீழ் நாகை மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விபத்து குறித்து விளக்கமளித்த பா.ரஞ்சித், தெளிவான திட்டமிடலுடனும் பாதுகாப்புடனும் படப்பிடிப்பு நடந்ததாகவும் இருப்பினும் மோகன்ராஜை இழந்துவிட்டோம் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து மோகன் ராஜ் குடும்பத்தினருக்கு பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி கொடுத்ததாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் தஞ்சாவூரில் அனுமதியின்றி படத்தின் படப்பிடிப்பு நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சாவூரில் உள்ள திருவிடைமருதூர் மாகாலிங்கேஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.