Skip to main content

'கபாலி' படத்தால் மன உளைச்சல் அடைந்தேன் - பா.ரஞ்சித்

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

pa ranjith talk about kabali movie

 

பா. ரஞ்சித், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி நேற்று இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

 

இவ்விழாவில் பேசிய பா. ரஞ்சித், "'ஜெய்பீம்' இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. அட்டகத்தில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது.  நான் யாரையும் வளர்த்து விட வில்லை. அவர்கள் திறமையானவர்கள் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான். அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. வெங்கட் பிரபு சாரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன். சென்னை 28 படம் தான் என் வாழ்வை செதுக்கியது. நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக்கொடுத்தது. சசி சார் நான் உதவியாளனாக இருந்த போது என்னைக் கூப்பிட்டு உட்காரவைத்து பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் மறக்க மாட்டேன். என் உதவியாளர்களிடம் நான் நன்றாக நடந்துகொள்ள அது தான் காரணம். இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம். 

 

வெற்றிமாறன் சார், ஒரு படத்தை எந்த ஒரு காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கலாம் என்பதை நிரூபித்தவர். இந்த மூன்று பேரும் இந்த விழாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அடுத்ததாக என் வாழ்வில் இரண்டு தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒன்று கலைப்புலி தாணு சார், ஞானவேல் சார். கலைப்புலி சாரிடம் கபாலி செய்த போது அவர் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை எனக்காக ஒத்துக்கொண்டார். படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் இருக்குறவங்க யாரும் ஒத்துக்கவில்லை. அதனால் மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் அவர்தான் கூப்பிட்டு படத்தின் கலெக்ஷன் காட்டி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். ஞானவேல் சார் அட்டகத்தி ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இன்று இங்கிருந்திருக்க மாட்டேன். இவர்கள் எல்லாம் இங்கிருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால் தான் என் வாழ்நாளில் மறக்கக் கூடாதவர்கள் அனைவரும் இந்த இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

 

இப்படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் மிகத் திறமையானவர்கள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரும் என்னை புரிந்து கொண்டு எனக்காக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. என் குடும்பம், மிளிரன், மகிழினி  என்னை தொந்தரவு செய்யாமல் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். என் அம்மா  15 வருடம் முன்  "பார்த்து போயா ஜெயிச்சுட்டு வா" என்று அனுப்பினார் .இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஜெயிச்சுட்டிருக்கேன்னு நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. காதல் சமூகத்தில் அத்தனை எளிதில்லை அதை இந்தப்படம் பேசும்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.

Next Story

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” - வைரலாகும் லால்சலாம் டிரைலர்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 LAL SALAAM - Trailer

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பது போல கதை அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை போன்ற வசனங்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.