Advertisment

“தயாரிப்பாளரிடமும் அதைச் சொல்லியே தான் எடுத்தேன்” - பா.ரஞ்சித்

pa ranjith speech in thangalaan audio launch

Advertisment

பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசுகையில், “சினிமா என்பது பிரபலமான மீடியம். அதைக் கையில் எடுக்கும்போது நம்முடைய பிரச்சனை மற்றும் சொல்லப்படாத வரலாற்றை மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்க்கும் ஒரு ஆயுதமாக இருக்கிறது. அதனால்தான் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். மற்றபடி சினிமா என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனென்றால் இங்குச் சொல்லப்படாத கதைகளும், வரலாற்றில் குறிக்கப்படாத பகுதிகளும் நிறைய உள்ளது. என்னுடைய வரலாற்றைப் படிக்கும்போது அதில் நான் யார் என்பது முக்கியமான கேள்வியாக இருந்தது. நான் ஏன் இப்படி இருக்கிறேன்? எனக்கு ஏன் இந்த பிரச்சனைகள் உள்ளது?, என்னுடன் சேர்ந்த பெரும் மக்களுக்கு ஏன் அநீதி ஏற்பட்டுள்ளது?, ஏன் இவ்வளவு பாகுபாடு, பிரிவினை?, இந்த கேள்விகளுக்கான பதிலை வரலாற்று ரீதியாகத் தேடும்போது, வரலாறே ஒன் சைடாக உள்ளது. அது பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிப் பேசவே இல்லை. அதில் அவர்களின் மொழியும், குறிப்புகளும் இல்லை. தேடிப் பார்க்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

அதுபோலத்தான் சினிமாவிலும் இந்த மக்களைப் பற்றிப் பேசவே இல்லை என்ற பெரிய தேடலுடன் வந்தேன். குறிப்பாக டாக்டர் அம்பேத்கரின் தீண்டப்படாதவர் என்ற புத்தகத்தைப் படிக்கும்போதுதான், மறைக்கப்பட்ட வரலாற்றை ஏன் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது? வரலாறு என்பது கல்வெட்டுகளில் இருப்பது மட்டும்தானா? சொல்லவிடாமல் மறைக்கப்பட்ட வரலாற்றை எப்படி மீண்டும் உருவாக்கிக் கொடுப்பது? ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கு அந்த சொல்லப்படாத வரலாற்றை தன் கற்பனையின் யுக்தியால் மீண்டும் உருவாக்குவதை அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வந்த மாணவனாக நான் இங்கு இருக்கிறேன். அந்த வரலாற்றையும், நம்பிக்கைகளையும் சினிமாவில் சொன்னால் அது வெற்றி அடையுமா என்று தெரியவில்லை, தமிழ் சினிமா வேறு மாதிரி இருந்தது. நான் சொல்ல வருவதை ஏற்றுக்கொள்வார்களா என்ற பயம் இருந்தது. அந்த பயத்தைப் போக்கியது என்னுடைய இயக்குநர் வெங்கட் பிரபுதான். அவருக்கு என்னைப் போன்ற ஐடியாவே இல்லாமல் முக்கியமான சென்னையுடைய பதிவை ‘சென்னை 28’ படம் மூலம் சொல்லியிருந்தார். அது இளைஞர்கள் மத்தியில் பெரிய வெற்றியைத் தந்தது.

Advertisment

‘சென்னை 28’ படத்தை மக்கள் புரிந்துகொண்டதை பிறகு, நான் எழுதிய மற்ற கதைகளை விட்டுவிட்டு ‘அட்டகத்தி’படத்தின் கதையை எழுதினேன். என்னுடைய வாழ்க்கையில் இருந்து நிறைய எடுத்து அதை சினிமாவாக மாற்றியதுதான் ‘அட்டகத்தி’ படம். அதை ஆடியன்ஸ் ஏற்றுக்கொண்ட பிறகு ‘மெட்ராஸ்’ படம் பண்ணுகிறேன். இந்த படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ஞானவேலிடம் சொல்லும் போது, இது கண்டிப்பாக நான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பண்ணுகிற படம்தான் , என்று சொல்லியே அதை எடுத்தேன். ‘கபாலி’, ‘காலா’,‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களும் வரலாற்றில் நான் யார் என்பதைத் தேடுகிற படமாக இருந்தது. இப்படி இருக்கும்போதுதான் விக்ரம் என்னை அழைத்தார். அவரை எனக்குப் பல வடிவங்களில் பிடிக்கும். மற்ற கமர்ஷியல் நடிகர்களைப் போல அவரை நான் பார்க்கவில்லை. ஒரு கேரக்டர்காக அவர் தன்னை மாற்றிக்கொள்ளுவதைப் பார்க்கும்போது கலையை நேசிக்கக் கூடிய கலைஞனாக இருந்தார். அதனால் அவருடன் சேர்ந்து வேலை செய்வது சவாலாக இருந்தது.

விக்ரம் நான் சொல்லுவதைக் கேட்பாரா? என யோசித்தேன். ஆனால், அவர் அதை ஆத்மார்த்தமாகப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டார். அன்றைக்குத்தான் என் வாழ்க்கையில் பெரிய சவால் தொடங்கியது. இது போன்ற நடிகரை எப்படி கையாளுவது என நினைக்கும்போது, அவர் அதைப் புரிந்துகொண்டு முதல் நாளே படப்பிடிப்பில் நான் எதிர்பார்த்த தங்கலானாகவும் காடையனாகவும் வந்து நின்றார். தங்கலானுக்கும் முந்தைய காலகட்டத்தில் உள்ள கதாபாத்திரம்தான் காடையன். படப்பிடிப்பிற்கு முன்பு ஒத்திகை பார்க்கும்போது நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஒரு ஆசிரியராக இருக்கும் இவரை காட்சிப்படுத்தக் கடினமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ‘ரஞ்சித் இதை இப்படிப் பண்ணலாமா?’ எனக் கேட்பார். நான் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு. நான் பிடிவாதமாகச் சில விஷயங்களைச் சொல்லுவேன், அதை எளிதாகப் புரிந்துகொள்வார்” என்றார்.

actor vikram pa.ranjith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe