இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடைக்ஷன்’ தயாரிப்பில் கெத்து தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டகாரண்யம்’. இப்படத்தில் ரித்விகா, ஷபீர், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ‘குண்டு’ பட இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் பழங்குடியின மக்களை அரசாங்கம் எப்படி கையாள்கிறது என்பதைப் பற்றி பேசுகிறது. இப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் பேசுகையில், “என்னுடன் இனைந்து படம் பண்ண வரவங்க ரொம்ப கம்மிதான். அவங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கடந்த 13 வருஷத்தில் சில பேரிடம் மட்டும் தான் நான் தொடர்ந்து வேலை செய்து வருகிறேன். அதில் சிலர் ஏதோ ஒரு வகையில் என்னையும் என் அரசியலையும் நம்புகிறவர்களாக இருக்கிறார்கள்.
நீலம் நிறுவனத்தில் பல பேர் பல விதத்தில் வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவை முற்றிலுமாக ஆழக்கூடிய ஆர்டிஸ்டுகளாகவும் டெக்னிஷியன்களாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இல்லாமல் சமூக சமத்துவமின்மையை புரிந்து கொண்டு தனது படைப்பின் மூலம் அதை சரி செய்பவர்களாக இருப்பார்கள் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. நான் வெறும் டைரக்டராக வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் சினிமாவிற்குள் வரவில்லை. ஆனால் டைரக்டர் ஆனால் இந்த மாதிரி தான் படம் எடுப்பேன் என்ற நோக்கத்தோடு வந்தேன். ஒரு மூன்று வருடம் இந்த துறையில் இருப்பேன் என்று தான் நினைத்தேன். ஏனென்றால் நான் பேசுகிற அரசியல் அப்படி. எங்கள் ஊரில் காலனித்தெருவைத் தாண்டி தெருவுக்குள் என் அரசியலை பேசினாலே நம்ப மாட்டார்கள். ஆனால் இவ்வளவு பெரிய சினிமாத் துறையில் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி எனக்குள் இருந்தது. ஆனால் மக்கள் என்னை டைர்கடராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் ஏற்றுக்கொண்டார்கள். அதன் மூலம் நீலம் நிறுவனம் இன்று இவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
ஒரு கமர்ஷியல் படத்தை தாண்டி ஆர்டிஸ்டிக் படம் எடுத்து அதை ரிலீஸ் பன்னுவதே சவால் நிறைந்த விஷயம். அதைத்தாண்டி நாங்கள் அரசியலையும் பேசுகிறோம். இது வெற்றியடையுமா, மக்களை சென்றடையுமா என்ற பெரிய கேள்வி இருக்கும். ஆனால் கதையை பிரதானமாக வைத்து அதனுள் கருத்துடன் கமர்ஷியல் அம்சத்தையும் உள்ளடக்கி நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதை நீலம் நிறுவனம் நிரூபித்திருக்கிறது. அதனால் இன்றைக்கு இருக்கிற சவால்களை சமாளிக்கக்கூடிய மன தைரியம் எனக்கு வந்திருக்கிறது.
முதலில் ஓடிடி நிறுவனங்கள் நிறைய படங்களை வாங்கி வந்தார்கள். ஆனால் இப்போது படத்தில் இருக்கும் கருத்தை வைத்து அப்படத்தை தடைசெய்யும் அளவிற்கு பவர்புல்லாக இருக்கிறார்கள். இந்தியளவில் எப்படி இடதுசாரிகள் முன்பு வலுவாக இருந்தார்களோ இப்போது அதை விட வலது சாரிகள் வலுவாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு படத்தில் அதிபுத்திசாலிகள் தான் குறியீடுகளை ஆராய்வார்கள். ஆனால் இப்போது பல பேர் முன்வந்துவிட்டார்கள். குறிப்பாக சென்சார் போர்டு அதிகாரிகள், அதில் தீவிரமாக இருக்கிறார்கள். அவர்கள் வலது சாரி ஆதரவாளர்கள் என்பதை அவர்களின் நடவடிக்கைகளிலே தெரிந்து விடும். சான்றிதழ் பெற போனால் அவர்கள் நம்மை பார்க்கும் விதம், நடத்தும் விதம், அதுவே காட்டிக்கொடுத்துவிடும். அதையும் மீறி ஒரு படத்தை ரிலீஸ் செய்வது, நமக்கான பார்வையாளர்கள் யார், படம் வாங்கும் ஒடிடி நிறுவனங்கள் யார், படத்தை வெளியிடுபவர் யார்... இவர்களை எப்படி சமாளிக்கப் போறோம். சமாளிப்பை மீறி படத்தை ரிலீஸ் செய்வது மிகப்பெரிய சவால். அந்த சவாலை விரும்பி ஏற்றுக்கொண்டு தான் படம் தயாரிக்கிறோம். மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். அதனால் நமக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் மக்கள் தான்.
மக்களுக்கு அவர்கள் ஏற்கனவே பழக்கப்பட்ட அதாவது எந்த பிரச்சனையும் இல்லாத ஒரு கதையை சொல்லாமல், அவர்கள் வசிக்கும் சமூக பிரச்சனை குறித்து பேசும் போது அவர்களை தியேட்டருக்குள் வரவழைப்பது நிச்சயம் பெரிய சவால். அந்த சவாலையும் ஏற்றுக்கொண்டு தான் படம் பண்ணுகிறோம். மக்களின் நம்பிக்கை மீறி எதுவும் இல்லை. அந்த நம்பிக்கையில் தான், யாராலும் யோசிக்க முடியாத, பல பின்விளைவுகள் வரும் எனத் தெரிந்தும் அது போன்ற கதையை எடுக்கிறோம். தண்டகாரண்யமும் அது போன்ற ஒரு கதை தான்.
நான் அம்பேத்கரியம் பேசுவேன். அதியன் ஆதிரை கம்யூனிஸம் பேசுவார். எங்களுக்குள் கருத்து முரண்கள் இருக்கும். ஆனால் நாங்கள் எல்லாருமே ஒரே தளத்தில் இயங்குக்கூடியவர்கள். ஆனால் பிரச்சனை எங்கு வருகிறதென்றால், தத்துவங்களை யார் கையாள்கிறார்கள், எப்படி கையாள்கிறார்கள் என்பதில் இருந்துதான். சமூகத்தில் இருக்கும் சமத்துவமின்மையை கப்பாற்றுகிறவர்களுடன் எங்களால் வேலை செய்ய முடியாது. அதனால் சமத்துவத்தை பேசுகிற நண்பர்களுடன் தொடர்ந்து பயணிக்கிறோம். அது வணிக ரீதியாகவும் வெற்றி பெறக்கூடிய சூழலையும் உருவாக்க முயற்சிக்கிறோம். இதன் மூலம் எங்கள் அரசியலை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முற்படுகிறோம். எங்களுடைய நோக்கம் சமூகத்தில் சமத்துவம் மலர வேண்டும். இதனால் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்கிறோம். அப்பொதெல்லாம் எனக்கு அம்பேத்கர் தான் உதவியாக இருப்பார். நான் மக்களை தான் நம்புகிறேன்.
நேபாளத்தில் கூட ஜென்-சி தலைமுறையினர்கள் பயங்கரமாக போராட்டம் நடத்துகிறார்கள். அதற்கு ஒரு ராப் பாடகர் தான் தூண்டுகோலாக இருக்கிறார். அதனால் கலை என்பது சாதாரண விஷயம் கிடையாது. கலையை அரசியலாக பயன்படுத்தும் போது பிரச்சனை வரும் என நிறைய பேர் சொல்வார்கள். ஆனால் கலை, நிறைய நாடுகளில் பல மாற்றங்களை உருவாக்குகிறது. அதுதான் நம்ம பக்கத்தில் இருக்கும் நேபாளத்திலும் நடக்கிறது. ஒரு கலைஞனால் எப்படி இவ்வளவு ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்த முடியும். அதே போல் ஒரு கலை படைப்பு ஒரு போராட்டத்தை எப்படி வழிவகுக்கும். அது எப்படி ஒரு நாட்டை சரிசெய்ய பயன்படுத்துகிறது... இதனை ரொம்ப வலுவாக இன்று நிறைய பேர் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதே வேலையைத் தான் நீலம் நிறுவனமும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறது.
திராவிட இயக்கங்கள், தன் தத்துவங்களை படங்களில் பேசி ஒரு அரசியல் மாற்றத்திற்காக சினிமாவை பயன்படுத்தியது. அதற்கு பிறகு சமூக நீதி என்ற கொள்கையை மக்களிடம் போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நீலம் நிறுவனம் சினிமாவை பயன்படுத்திகிறது. தண்டகாரண்யம் உண்மையிலே சொல்ல துணியாத ஒரு கதை. அதை சொல்ல துணிந்திருக்கிற அதிரன் ஆதிரைக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கும் அவருக்கும் கம்யூனிசம் அம்பேத்கரியம் தொடர்பாக நிறைய விவாதங்கள் நடந்திருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே ஒரு இடத்தில் கூட தங்களது கொள்கையில் இருந்து பின்வாங்கியதே இல்லை. அதனால் அதியன் ஆதிரையை எப்போதுமே நான் பாராட்ட கடமைபட்டிருக்கிறேன்.
நீலம் தயாரிப்பில் இன்னும் நிறைய படங்கள் வரப்போகிறது. வெக்கை, பைசன், மக்கள் காவலன் மற்றும் இது இல்லாமல் இன்னும் மூன்று படங்கள் தயாரிப்பில் இருக்கிறது. இது எல்லாமே கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி எடுக்கவில்லை. மக்களை நம்பி தான் படம் எடுக்கிறோம்.