
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்தை கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், ஜூலை 22ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் இப்படத்தை சமீபத்தில் பார்த்த உலக நாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அப்போது நடிகர் கமல்...

"‘சார்பட்டா’ படத்தில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்கள், என் நண்பர்கள் பலர் அப்போது பாக்சர்களாக இருந்திருக்கிறார்கள். எனக்குப் படம் பார்க்கும்போது அந்தக் காலகட்டத்தை நேரடியாக பார்ப்பதைப்போல இருந்தது. 'சார்பட்டா' திரைப்படம் மக்களுக்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக இருக்கிறது. வெற்றிகரமான ஒரு திரைமொழியோடு மக்களை வெகுவாக கவர்ந்து, மக்களிடம் சென்று சேரும் விதமான ஒரு கூட்டு உழைப்பாக அற்புதமான படமாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பாராட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள். நான் மிகவும் ரசித்தேன். பா. ரஞ்சித் தனது கருத்துக்களை எளிதாக மக்களிடம் கொண்டுசேர்க்க ஒரு திரைமொழியைக் கையாண்டிருக்கிறார். அது ரசிக்கும்விதமாகவும், பாராட்டும் விதமாகவும் இருக்கிறது. இயக்குநர் இரஞ்சித் உள்ளிட்ட குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும், அன்பும்" எனபடக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)