இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கெத்து தினேஷ், ஆர்யா நடிப்பில் ‘வேட்டுவம்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் விழுந்தமாடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. அந்த வகையில் விழுந்தம்பாடி கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி நடந்த படப்பிடிப்பில் கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது காரை இயக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் எஸ். மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.  

இந்த உயிரிழப்பு சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்போரை பதைபதைக்க வைத்தது. விபத்து தொடர்பாக விளக்கமளித்த பா.ரஞ்சித், தெளிவான திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் மோகன்ராஜ் உயிர் பிரிந்துவிட்டது எனத் தெரிவித்திருந்தார். 

இந்த விபத்து தொடர்பாக பா.ரஞ்சித் உட்பட நான்கு பேர் மீது அலட்சியமாக செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளின் கீழ் நாகை மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பா.ரஞ்சித்தை தவிர்த்து மற்ற மூன்று பேரும் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக நாகை கீழ்வேளூர் நீதிமன்றத்தில் பா.ரஞ்சித் இன்று ஆஜரானார். முன் ஜாமீன் கேட்டு அவர் மனு கொடுத்த நிலையில் அவருக்கு முன் ஜாமீன் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.