Advertisment

பா.ரஞ்சித் செய்தது என்ன? 

Pa. Ranjith

Advertisment

'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்கிறாள் தமிழ்ப்பாட்டி ஔவை. அந்த அரிதான படைப்பாய்உருவான மனிதனுக்கே உரிய சிறப்புக் குணங்களுள் ஒன்று, 'உயர்வு தாழ்வு கற்பிப்பது'.

மதம், அதிகாரம், செய்தொழில், சாதி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து என வெவ்வேறு வடிவங்கள் மூலம் இக்குணம் தனதுஇருப்பைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. இதில், இந்திய நிலப்பரப்பிற்குள் வாழும் மக்களுக்கு அதிகம் பரிட்சயப்பட்டது சாதி எனும் வடிவமே. இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்குஎதிராக,பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது. சாதி எனும் அநீதி மூலம் ஒடுக்குதலுக்கு உள்ளான மக்களின் குரல் கடந்த காலங்களை விட, சமகாலத்தில் சற்று ஓங்கியே ஒலித்து வருகிறது. தமிழ் சினிமாவில் காலம் காலமாகசாதிக்கு எதிரானகருத்துகள், கதைகளைக் கொண்ட படங்கள் வெளிவந்திருந்தாலும் எந்த வகையிலும்நீர்த்துப் போகாதநிஜத்திற்கு நெருக்கமான அரசியலைசினிமாப்படுத்தி தன்னுடைய திரைப்படங்கள் மூலம் பல புதிய விவாதங்களை ஏற்படுத்தியவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

2012-ஆம் ஆண்டு வெளியான'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பா.ரஞ்சித், அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து வடசென்னையைக் கதைக்களமாக்கி இயக்கிய'மெட்ராஸ்' திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து 'கபாலி', 'காலா' படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இவ்விரு படங்களும் பேசிய அரசியல், தமிழ் சினிமாவிற்குப் புதியதில்லை என்றாலும், அதில் இருந்த காரம் தமிழ் சினிமாவிற்குப் புதிதானதே. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை, அதே சமூகப் பின்புலத்தில் இருந்து வந்த ஒருவர் பேசியது பெரிய விவாதத்தையும், அத்தகைய விவாதங்களுக்குப் புதிய களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது..

Advertisment

திரைப்படங்கள் மட்டுமல்லாது சமூக தளங்களிலும் மாற்றத்திற்கான பல்வேறு முன்னெடுப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார் பா.ரஞ்சித். அவர் முயற்சியில் உருவான'கூகை திரைப்பட இயக்கம்', 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்', 'நீலம் தயாரிப்பு நிறுவனம்', 'நீலம் பதிப்பகம்', 'நீலம் மாத இதழ்', 'நீலம் பண்பாட்டு மையம்'ஆகியன சமூக மாற்றத்தை ஏற்படுத்த கலை எனும் வடிவத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அதில் வெற்றியும் கண்டுவருகிறது. 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' இசைக்குழுவில் இடம் பெற்றிருந்த இசைவாணி என்ற பெண், உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் பி.பி.சி-யால் தேர்ந்தெடுக்கப்பட்டதை, இதற்கான சான்றாகச் சொல்லலாம். இதனைத் தவிர்த்து, இயக்குனர் மாரி செல்வராஜ் உட்பட தன்னோடு பயணித்து வரும் பலரது வெற்றியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

பா.ரஞ்சித் எழுப்பும் குரல் சற்று காத்திரமாக உள்ளது என்ற விமர்சனங்கள் எழாமலும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் குரல் சற்று காத்திரமாக இருப்பதுதான் உலக இயல்பு. தனது வருகைக்குப் பின்னர், தமிழ் சினிமாவின் பார்வையை, திரைப்படங்களின் வருகையை மாற்றிய பா.ரஞ்சித் தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து, 'சார்பட்டா பரம்பரை' எனும் படத்தை இயக்கி வருகிறார்.

cnc

ராஜராஜசோழன் சர்ச்சை, இயக்குனர் அமீருடன் மேடையில் கருத்து மோதல் உட்பட பல சர்ச்சைகளின் பிடியில் பா.ரஞ்சித் சிக்காமல் இல்லை. ஒத்த கருத்தியலை ஏற்று முற்போக்குத் தளங்களில் செயல்படுபவர்களே சில நேரங்களில் ரஞ்சித்துடன் முரண்படுவதும் உண்டு. ரஞ்சித் பேசுகிற ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை, அரசியலை பேசி சமீபத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் 'அசுரன்'. 'அசுரன்' படத்தைக் கைதட்டி கொண்டாடிய பலரும், அதே அரசியல் பேசுகிற ரஞ்சித் படங்களுடன் முரண்படுகின்றனர். மேலும், திராவிடக் கட்சிகளுடனும் பிற கட்சிகளுடனும் தலித்திய இயக்கங்கள் இணைந்து தேர்தல் அரசியலில் இயங்குவது குறித்து அவர் பேசியதும், ஒத்த சித்தாந்தத்தில் இயங்கி வருபவர்கள் மத்தியிலேயே சலசலப்பை உண்டாக்கியது. இதற்கான, காரணம் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பொதுச்சமூகத்தின் எண்ணவோட்டத்திற்கும் சம காலத்திய பொதுச்சமூகத்தின் கருதத்தக்க மனமாற்றத்திற்கும் மத்தியில் நிகழ்ந்துள்ள முன்னேற்றத்தை அங்கீகரிக்க வேண்டிய தேவையில் இருக்கிறது என்று சொல்லலாம்.

தனது செயல்பாடுகள் மூலம் இயக்குனர் ரஞ்சித், ஒரு இயக்கமாக இருக்கிறார். தன் முன்னெடுப்புகள் மூலம் தமிழ் சினிமா மற்றும் கலை தளத்தில் அவர் செய்திருப்பது பெரிது. அம்பேத்கரின் கருத்தியலை முழுமையாக உள்வாங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தின் குரல் தொடர்ந்து ஒலிக்க அவரது, 38-ஆவது பிறந்தநாளில் வாழ்த்துவோம்!

Pa Ranjith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe