pa ranjith assitant director issue update

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னை,ராஜா அண்ணாமலைபுரம்ராஜரத்தினம் அரங்குமுத்தமிழ்ப் பேரவையில் நடந்த நிகழ்ச்சியில், இந்து கடவுள்களான ராமர், சீதை, அனுமன் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் கவிதை வாசித்ததாக விடுதலை சிகப்பி மீது பாரத் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisment

இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு, “படைப்பு சுதந்திரத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பதா” எனக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர்கள் லெனின் பாரதி, சீனு ராமசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisment

இதனிடையே தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கில் முன் ஜாமீன் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் விடுதலை சிகப்பி. அந்த மனுவில், "கடவுளை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு போலியாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஜி. திலகவதி முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, தேவைப்படும்போது காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.