pa ranjith arya sarpatta 2 update

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. இதில் துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் வட சென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் பலரது வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக கடந்த 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. சார்பட்டா 2 என்ற தலைப்பில் இப்படம் உருவாகுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவானது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த சூழலில் பின்பு ஸ்கிரிப்ட் லெவலில் தான் படம் இருப்பதாக பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். பின்பு ஆர்யா, காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில், 2023ஆம் ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்யா, சார்பட்டா 2 படப்பிடிப்பு இந்தாண்டு ஏப்ரலில் இருந்து தொடங்கவிருப்பதாக சொன்னார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கவில்லை. மாறாக பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் ஆர்யா நடிக்கத் தொடங்கினார். இப்படத்தில் அவர் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்யா தற்போது சார்பட்டா 2 படம் குறித்து பேசியுள்ளார். அவர் தயாரிப்பு நிறுவனம் பேனரில் சந்தானம் நடித்த ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஆர்யா, சார்பட்டா 2 படப்பிடிப்பு தொடர்பான கேள்விக்கு சார்பட்டா 2 பட ஷூட்டிங் ஆகஸ்டில் இருந்து தொடங்குவதாக பதிலளித்தார்.