pa ranjith abour amit shah ambedkar speech issue

இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.

Advertisment

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் இந்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் அமித்ஷாவை கண்டித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.வும் காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் அமித்ஷாவின் பேச்சிற்கு அரசியல் தலைவர்கள் தாண்டி திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்தும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாபாசாகேப் அம்பேத்கரை யாராலையும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது. அவர் இல்லாமல் ஒரு மாடர்ன் இந்தியாவை கட்டி எழுப்பவே முடியாது. இதை இப்போது அமித்ஷாவும் அவரது கட்சியினரும் புரிந்து கொண்டிருப்பார்கள்.

அமித்ஷா பேசியதில் இருந்தே மக்கள் மத்தியில் பெரிய அலை உருவானது. இதில் இருந்து பாபாசாகேப் அம்பேத்கர் என்கிற பெயரில் இருக்கும் பவரை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். இப்போது இருக்கும் இந்தியாவில் அம்பேத்கரின் கருத்துகளை கொண்டு நமக்குள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு அம்பேத்கரியவாதியாக நான் பெருமை அடைகிறேன்” என்றார். முன்னதாக அமித்ஷா பேசிய அடுத்த நாள் தனது எக்ஸ் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து பா.ரஞ்சித் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment